வார, தினசரி சந்தைகளுக்கான ஏலம் ஒத்திவைப்பு பேரூராட்சி அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகை

வார, தினசரி சந்தைகளுக்கான ஏலம் ஒத்தி வைக்கப்பட்டதால் தி.மு.க.வினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2018-02-16 21:30 GMT
நிலக்கோட்டை

நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை, தினசரி சந்தைகளுக்கான ஏலம் நேற்று செயல்அலுவலர் செல்வராஜ் தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு நிர்வாக காரணங்களால் அந்த ஏலம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே நிலக்கோட்டை தி.மு.க. ஒன்றிய செயலாளர், மாயாண்டி, மாவட்ட ஆதிதிராவிடர் பிரிவு தலைவர் அழகர்சாமி, ஒன்றிய துணை அமைப்பாளர் செல்லப்பாண்டி உள்ளிட்ட தி.மு.க. கட்சியினர் நேற்று ஏலம் எடுக்க பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால் நிர்வாக காரணங்களால் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் முறையாக அறிவிப்பு செய்யாமல் ஒத்தி வைத்ததாக கூறி தி.மு.க.வினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அலுவலகத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். ஒத்தி வைக்கப்பட்ட ஏலம் முறையாக அறிவிப்பு செய்து நடத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்