அரக்கோணத்தில் பட்டப்பகலில் தலைமை ஆசிரியை வீட்டில் ரூ.13 லட்சம் நகை, பணம் கொள்ளை

அரக்கோணத்தில் பட்டப் பகலில் தலைமை ஆசிரியை வீட்டில் ஜன்னலை உடைத்த மர்மநபர்கள் ரூ.13 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பியுள்ளனர்.

Update: 2018-02-16 22:24 GMT
அரக்கோணம்,

அரக்கோணம் டவுன் ஹால் 5-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 56). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். தினமும் சென்னைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்புவார்.

இவருடைய மனைவி விஜயா (48), அரக்கோணம் அருகே சின்ன மோசூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை நாகராஜன் வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டார். மகள் ஜெயஸ்ரீ (18) கல்லூரிக்கும், மற்றொரு மகள் ராஜஸ்ரீ (14) பள்ளிக்கும் சென்று விட்டனர்.

அதன்பின் காலை 8.30 மணியளவில் வீட்டை பூட்டிய விஜயா பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். அவரது வீட்டின் அருகே வசிக்கும் 2 குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளனர். இந்த நிலையில் பகல் 11 மணியளவில் விஜயா வீட்டின் சுவர் இடிக்கப்படும் சத்தம் கேட்டுள்ளது.

அந்த பகுதியில் வசிப்பவர்கள் உடனே இவரது வீட்டின் அருகே சென்றனர். அப்போது வெளியில் ‘கிரில் கேட்’ மூடப்பட்டு இருந்ததால் வீட்டில் ஏதோ வேலை நடக்கிறது என்று நினைத்துக் கொண்டு உள்ளே செல்லாமல் திரும்பி விட்டனர்.

மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த விஜயா வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் மற்றும் பொருட்கள் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 65 பவுன் நகை, 30 ஆயிரம் ரொக்க பணம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து பதறியவாறு தனது கணவருக்கு தெரிவித்தார்.

பின்னர் அரக்கோணம் டவுன் போலீசுக்கும் அவர் தகவல் அளித்தார். இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் வேடி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணையை தொடங்கினர்.

அப்போது பீரோ வைக்கப்பட்டிருந்த அறையின் பக்கவாட்டு சுவரில் இருந்து ஜன்னலின் பாதி பகுதியை உடைத்து மர்ம நபர்கள் அதன் வழியே வீட்டுக்குள் புகுந்து கைவரிசை காட்டிவிட்டு தப்பியது தெரியவந்தது. திருடப்பட்ட நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.13 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது. இது குறித்து துப்பு துலக்க தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஜன்னல் மற்றும் பீரோவில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

பட்டப்பகலிலேயே அதுவும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் குடியிருப்புகளும் நிறைந்த இடத்தில் சர்வசாதாரணமாக ஜன்னலை உடைத்து கைவரிசை காட்டிவிட்டு தப்பியுள்ளது அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்