வடிவுடையம்மன் கோவிலில் இருந்து தமிழ் தாமரை யாத்திரை தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கினார்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் இருந்து பா.ஜனதா கட்சியின் தமிழ் தாமரை யாத்திரையை தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கினார்.
திருவொற்றியூர்,
தமிழக பா.ஜனதா கட்சியின் சார்பில் ‘தமிழ் தாமரை யாத்திரை’ நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்திருந்தார். அதன்படி அந்த யாத்திரையை தொடங்குவதற்காக தமிழிசை சவுந்தரராஜன் நேற்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு முதலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் கட்சியை பலப்படுத்துவதற்காகவும், வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை சந்திப்பதற்காகவும், ‘வாக்குச்சாவடிக்கு செல்வோம், வாக்குகளை வெல்வோம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி இப்போது தொடங்கப்படும் இந்த யாத்திரை மொத்தம் 45 மாவட்டங்களில் தினமும் 2 மாவட்டங்கள் வீதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
அடுத்த மாதம் 25-ந் தேதி
இந்த சுற்றுப்பயணம் அடுத்த மாதம் 25-ந் தேதி வரை நடக்க இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி 24-ந் தேதி புதுச்சேரி வர இருக்கிறார். இந்த மாதம் 18-ந் தேதி டெல்லியில் அகில பாரத மத்திய தலைமை அலுவலகம் திறக்கப்பட இருப்பதால் அதில் பங்கேற்க அனைத்து மாநில தலைவர்களை அழைத்துள்ளனர். அதில் கலந்துகொள்ள இருப்பதால் அந்த 2 நாட்கள் தவிர மற்ற நாட்களில் சுற்றுப்பயணத்தை தொடர இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கோவிலில் இருந்து அவர் யாத்திரையை தொடங்கினார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ஜெயகணேஷ், சாந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.