ரெயில் மூலம் கடத்தல்: சென்டிரல் ரெயில் நிலையத்தில் 23 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை,
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு நேற்று அதிகாலை ஹவுரா மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படையின் தனிப்படை போலீசார் பயணிகளை சோதனை செய்தனர்.
அப்போது பொது பெட்டியில் இருந்து சந்தேகத்துக்கு இடமாக இறங்கிய 2 நபரின் பைகளை போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் பைகளில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த கோகுல கிருஷ்ணன்(வயது 44) மற்றும் சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த முத்து கிருஷ்ணன் (27) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் ஆந்திரா மாநிலம் தூனி நகரில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 23 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அதை போதை பொருள் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் லூயிஸ் அமுதன் கஞ்சா கடத்தியவர்களை பிடித்த தனிப்படை போலீசாரை நேரில் சந்தித்து பாராட்டினார்.