தாம்பரம் அருகே காருக்குள் டிரைவர் மர்ம சாவு போலீஸ் விசாரணை
தாம்பரம் அருகே வாடகை கார் டிரைவர், காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய சாவுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தாம்பரம்,
தாம்பரத்தை அடுத்த சேலையூர் அகரம்தென் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகே, நேற்று முன்தினம் கார் ஒன்று நீண்ட நேரமாக நின்றுக் கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த, அந்த வழியாக சென்றவர்கள் காரின் அருகே சென்று பார்த்தனர்.
அப்போது காருக்குள் டிரைவரின் இருக்கையில் ஒரு நபர் முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனே அவர்கள் இது குறித்து சேலையூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், கார் கதவை திறக்க முயன்றனர். ஆனால் கார் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. எனவே போலீசார் கார் கண்ணாடியை உடைத்து, கதவை திறந்தனர்.
வாடகை கார் டிரைவர்
அப்போது காருக்குள் டிரைவர் இருக்கையில் இருந்த அந்த நபர் உட்கார்ந்திருந்த நிலையிலேயே இறந்து கிடந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த கார் தாம்பரம் முடிச்சூரில், லாரன்ஸ் என்பவர் நடத்தி வரும் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதும், அதில் இறந்து கிடந்த நபர் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கார் டிரைவர் முகமது ரசாக் (வயது 37) என்பதும் தெரியவந்தது.
குடிப்பழக்கம்
முகமது ரசாக் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ஆவார். இவர் சென்னையில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்து உள்ளார்.
இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. எனவே அவர் போதையில் காருக்குள் இருந்தபோது மூச்சுதிணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.
இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு கார் டிரைவரின் சாவுக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.