மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில் தரகர் கைது

சென்னை தொழில் அதிபர் மகளுக்கு மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கித் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தரகரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-02-16 23:00 GMT
திருவள்ளூர்,

சென்னை கொளத்தூர் புதிய லட்சுமிபுரம் வ.உ.சி தெருவில் வசிப்பவர் தொழிலதிபர் முருகன். மீன்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது மகளை மருத்துவக்கல்லூரியில் சேர்க்க கடந்த 2016-ம் ஆண்டு முயற்சி செய்தார்.

இதற்காக அவர் திருவள்ளூரை அடுத்துள்ள பூண்டியை சேர்ந்த சந்திரன்(வயது 49) என்பவரை தொடர்பு கொண்டார். அவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் தரகர்கள் ஜெயச்சந்திரன், ராமசாமி(57) ஆகியோர் மூலமாக ‘சீட்’ வாங்கி தருவதாக கூறினார். மேலும் இதற்காக ரூ.38 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு ஒப்பு கொண்ட முருகன் முதல் தவணையாக ரூ.25 லட்சத்தை சந்திரனிடம் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட சந்திரன் தனக்கு தரகு தொகையாக ரூபாய் 2 லட்சத்தை எடுத்துக் கொண்டு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் ரூ.23 லட்சத்தை கொடுத்ததாக கூறினார். ஆனால் அவர் உறுதியளித்தவாறு மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கித் தரவில்லை. இதனால் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு முருகன் சந்திரனை கேட்டுள்ளார். அதற்கு அவர் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி ஒரு கட்டத்தில் தலைவமறைவாகிவிட்டார்.

ஏமாற்றப்பட்ட முருகன் இதுபற்றி திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு கண்ணப்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஸ்வநாதன், ரமேஷ்பாபு, வாசுதேவன், ஸ்டெல்லாமேரி, வீரமணிகண்டன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசார் கடந்த 3-ந் தேதி திருவள்ளூரில் பதுங்கியிருந்த சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக இருந்த மற்றவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று போலீசார் சேலத்தில் பதுங்கியிருந்த தரகரான ராமசாமி(57) என்பவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு தரகர் ஜெயச்சந்திரன், கல்லூரி முதல்வரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்