பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சாவு

சேலத்தில் மொபட் மீது கார் மோதியதில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2018-02-16 22:45 GMT
சேலம்,

சேலம் கன்னங்குறிச்சி பெரிய கொல்லப்பட்டி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபேஷ். இவருடைய மகன் ராகுல்(வயது20). இவர் சேலம் ஏற்காடு மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

ராகுல் நேற்று காலை வழக்கம்போல் மொபட்டில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அவர் கல்லூரி அருகே, முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார், மொபட் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ராகுல் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காரில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராகுல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு அஸ்தம்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே ஆஸ்பத்திரியில் ராகுலின் உடலை பார்த்து கல்லூரியில் படிக்கும் சக மாணவர்கள் கதறி அழுதனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்