கரூரில் மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்

கரூரில் மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-02-16 22:45 GMT
கரூர்,

ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மின்சார வாரிய ஊழியர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய சங்கம், பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் உள்பட 10 தொழிற்சங்கத்தை சேர்ந்த மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

கரூரில் தொழிற்சங்கங்களை சேர்ந்த மின்சார வாரிய ஊழியர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை. கோவை சாலையில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பு நேற்று காலை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். போராட்டம் குறித்து மாவட்ட தலைவர் குமரேசன் கூறுகையில், “கரூர் மாவட்டத்தில் மின்சார வாரிய ஊழியர்கள் 660 பேர் உள்ளனர். இதில் 400 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளோம்” என்றார்.

மின்சார வாரிய ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்காத தொழிற்சங்கத்தை சேர்ந்த சிலர் பணிக்கு வந்திருந்தனர். மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் மின் வினியோகம் பாதிக்கப்படவில்லை.

ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் மின்சார வாரிய அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். இது குறித்து கரூர் மின்சார வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறுகையில், “வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அவர்கள் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒத்தக்கடை, தாளப்பட்டி ஆகிய 2 இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மின்சார உபகரணத்தில் கோளாறு ஏற்பட்டது. அவை உடனடியாக சரிசெய்யப்பட்டது. மின்சார வினியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. மேலும் பொதுமக்களிடம் இருந்து பாதிப்பு தொடர்பாக மின்சார வாரிய அலுவலகத்திற்கு எந்த புகாரும் வரவில்லை” என்றார்.

மின்சார கட்டண வசூல் மையங்களில் ஊழியர்கள் பணிக்கு வராததால் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை. மேலும் மின் கட்டண வசூல் பாதிப்படைந்தது.

மேலும் செய்திகள்