கள்ளக்காதல் தகராறில் கார் டிரைவரை கொலை செய்ததாக 3 பேர் கைது

கள்ளக்காதல் தகராறில் கார் டிரைவரை கொலை செய்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-02-16 22:30 GMT
அந்தியூர்,

சேலம் மாவட்டம் சங்ககிரி ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 41). கார் டிரைவர். இவருடைய மனைவி வளர்மதி (38). இந்தநிலையில் சேகர் கடந்த 12-ந் தேதி ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதியில் பொன்னாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள வனக்குட்டையில் பிணமாக மிதந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றினார்கள். அப்போது சேகரின் மனைவி வளர்மதி தன்னுடைய கணவர் சாவில் மர்மம் உள்ளது. விசாரிக்க வேண்டும் என்று பர்கூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

உடல் கிடந்த குட்டை அருகே ஒரு செல்போன் இருந்தது. அந்த செல்போனை வைத்து போலீசார் விசாரித்தபோது, அது சேகர் வசித்த அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் மணி என்கிற செல்லமுத்து (38) என்பவருக்கு சொந்தமானது என்று தெரிந்தது. அவரை பிடித்து போலீசார் துருவி துருவி விசாரித்தபோது, அவர் அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய நண்பர்களான குப்பன் (35), சக்திவேல் (42) ஆகியோருடன் சேர்ந்து சேகரை கொன்றது தெரிந்தது.

அதாவது செல்லமுத்துவுக்கும் அந்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது. அதே பெண்ணுடன் சேகரும் பழகிவந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த செல்லமுத்து தன் நண்பர்கள் குப்பன், சக்திவேல் ஆகியோருடன், சேகரை நைசாக பேசி காரில் சம்பவத்தன்று பர்கூர் வனக்குட்டைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சேகர் குட்டையில் இறங்கி குளித்துள்ளார். உடனே செல்லமுத்து நண்பர்களுடன் சேர்ந்து சேகரின் தலையை குட்டையில் உள்ள ஒரு பாறையில் அடித்துள்ளார். அதில் படுகாயம் அடைந்து அவர் இறந்துவிட்டது தெரிந்ததும், உடலை குட்டையில் போட்டுவிட்டு காரில் தப்பி வந்துவிட்டார்கள்.

அவசரமாக அவர்கள் அங்கிருந்து செல்லும்போது, எப்படியோ செல்லமுத்துவின் செல்போன் தவறி கீழே விழுந்துவிட்டது. அது போலீசாரின் கைகளில் கிடைத்ததால் கொலையாளிகள் சிக்கிக்கொண்டார்கள்.

இதைத்தொடர்ந்து பர்கூர் போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து செல்லமுத்து, குப்பன், சக்திவேல் ஆகியோரை கைது செய்தார்கள். பின்னர் பவானி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்