நீலகிரி மாவட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் 260 பேர் வேலைநிறுத்தம், பொதுமக்கள் அவதி

நீலகிரி மாவட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் 260 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கவுண்ட்டர்கள் மூடப்பட்டதால் மின்கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Update: 2018-02-16 22:15 GMT
ஊட்டி,

ஊதிய உயர்வில் அதிகாரிகள், ஊழியர்கள் என்ற பாகுபாட்டை புகுத்தக்கூடாது, காலநிலை பதவி உயர்வை உத்தரவாதப்படுத்த வேண்டும், மின்வாரிய பிரிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும், 25 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் மின்வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியது. பல கட்டங்களாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால், ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 664 மின்வாரிய ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதில் 260 பேர் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பணிக்கு வரவில்லை. மற்ற மின்வாரிய ஊழியர்கள் 404 பேர் பணிக்கு வழக்கம்போல் வந்திருந்தனர். ஊட்டியில் ராஜீவ்காந்தி ரவுண்டானா அருகே உள்ள உதவி கோட்ட மின் பொறியாளர் அலுவலகம் முன்புள்ள அறிவிப்பு பலகையில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு நீலகிரி மின்பகிர்மான வட்டக்கிளை சார்பில், வேலைநிறுத்த போராட்டத்திற்கு சங்க வேறுபாடு இன்றி ஆதரவு தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

நீலகிரியில் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் மின்வாரிய அனைத்து பணியாளர்-பொறியாளர் சங்கம் (எம்.ஏ.பி.பி.எஸ்.), பாட்டாளி தொழிற்சங்கம் (பி.டி.எஸ்.), தமிழ்நாடு பவர் என்ஜினீயர்ஸ் ஒருங்கிணைப்பு (டி.என்.பி.இ.ஓ.), தமிழ்நாடு மின்வாரிய அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் (டி.என்.எம்.ஏ.எம்.எஸ்.), பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் (பி.எம்.எஸ்.) உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

துணை மின்நிலையங்கள் உள்ளிட்ட மற்ற அலுவலகங்களில் பணிக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் வழக்கம்போல் பணிகளை செய்தனர். ஊட்டி துணை மின்நிலையத்தில் மின்கட்டண பணம் செலுத்தும் கவுண்ட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. இதனால் மின்கட்டணம் செலுத்த வந்த மின் நுகர்வோர்கள் செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒரு சிலர் கவுண்ட்டர்கள் திறப்பார்களா? என்று காத்திருந்து பின்னர் வெகுநேரம் கழித்து தங்கள் வீடுகளுக்கு திரும்பி சென்றனர். இதனால் மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் மின்வினியோகம் தடையின்றி வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான இடங்களில் மின்கட்டணம் செலுத்த முடியாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மின்வாரிய ஊழியர்களின் வேலைநிறுத்தத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள துணை மின்நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்