காவிரி வழக்கை தமிழக அரசு சரியாக கையாளவில்லை தங்கதமிழ்செல்வன் குற்றச்சாட்டு

காவிரி வழக்கை தமிழக அரசு சரியாக கையாளாததால் 14.75 டி.எம்.சி. தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளதாக தங்கதமிழ்செல்வன் குற்றம்சாட்டினார்.

Update: 2018-02-16 21:30 GMT
திண்டுக்கல்

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி.டி.வி.தினகரன் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று திண்டுக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு, தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தங்கதுரை தலைமை தாங்கி பேசினார். அணியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கில் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வெளியாகலாம். இந்த தீர்ப்பு வந்தவுடன் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் தான் உள்ளனர். ஆர்.கே.நகரை போல, வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுவோம். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனிக்கட்சி மற்றும் குக்கர் சின்னம் கேட்டு தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்துள்ளோம்.

துணை முதல்-அமைச்சர் பதவிக்காக, துரோகம் செய்து ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் கூட்டு சேர்ந்துள்ளார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது போல தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. ஓ.பன்னீர்செல்வம் தான் பொய் சொல்கிறார்.

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், தமிழகத்துக்கு 14.75 டி.எம்.சி. தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு டி.எம்.சி. தண்ணீர் மூலம் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 14.75 டி.எம்.சி. தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 8 மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த வழக்கை தமிழக அரசு சரியாக கையாளவில்லை. அரசு வக்கீல் முறையாக வாதாடவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. இது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் நிர்வாக திறமையின்மையையே காட்டுகிறது.

போக்குவரத்து தொழிலாளர்களை போல மின்வாரிய ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் மின்கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது. சட்டசபையில் ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்ததை தி.மு.க. எதிர்த்தது. ஜெயலலிதாவை குற்றவாளி என்று மு.க.ஸ்டாலின் கூறுவதை நிறுத்த வேண்டும். இந்த பிரச்சினையில் முதல்- அமைச்சர் ஏன் பதில் பேசவில்லை.

எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை இறந்ததில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. அந்த காளைக்கு தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து வழங்கப்பட்டதாலேயே இறந்ததாக தெரிகிறது. எனவே காளையின் உடலை பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்