தாலுகா அலுவலகங்களில் சிட்டா அடங்கல் விவரத்தை கொடுத்து ஏரிகளில் வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம், கலெக்டர் தகவல்

தாலுகா அலுவலகங்களில் சிட்டா அடங்கல் விவரத்தை கொடுத்து ஏரிகளில் வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம் என்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் கூறினார்.

Update: 2018-02-16 21:30 GMT
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளும், அதற்கு கலெக்டர் அளித்த பதில்களும் விவரம் வருமாறு:-

விவசாயி சுப்பிரமணி:- வனவிலங்குகளிடம் இருந்து விவசாய பயிர்களை காப்பாற்ற மானியத்தில் நைலான் வலைகள் வழங்க வேண்டும். செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் மூட்டைகளை வைப்பதில் இடநெருக்கடி உள்ளது. போதுமான இடவசதி செய்து தர வேண்டும்.

கலெக்டர்: மானியத்தில் நைலான் வலைகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் போதுமான இடவசதி ஏற்படுத்த அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும

விவசாயி சிவஞானம்:- தனியார் சர்க்கரை ஆலைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்புகளை காவல்துறையினரின் துணையுடன் வெளிமாவட்டத்தில் உள்ள தனியார் ஆலைகளுக்கு கொண்டு செல்கின்றனர். இதனால் பெரியசெவலை ஆலையில் 50 ஆயிரம் டன் அரவை குறைந்துள்ளது. இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க மாணவர்களிடம் கல்வி அதிகாரிகள் பணம் வசூலிக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். செம்மனங்கூர் ஏரி ஆக்கிரமிப்பு இன்னும் அகற்றப்படவில்லை. கெடிலம் பகுதியில் உள்ள மலட்டாறில் தடுப்பணை கட்ட வேண்டும்.

கலெக்டர்: தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகளை எடுத்துச்செல்வதை வேளாண் அதிகாரிகள் மூலம் கண்டுபிடித்து உடனே தடுத்து நிறுத்தப்படும். மாணவர்களிடம் பணம் வசூல் செய்யும் அதிகாரிகள் மீது முதன்மை கல்வி அலுவலர் மூலமாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். செம்மணங்கூர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் வருகிற நிதியாண்டில் 26 தடுப்பணைகளை கட்ட அரசு அனுமதியளித்துள்ளது. நிதி வரப்பெற்றதும் அதற்கான பணிகள் தொடங்கப்படும்

விவசாயி அய்யனார்:- மணலூர்பேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கரும்புக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். 2017-ல் உளுந்துக்கு காப்பீடு செய்தோம். ஆனால் இதுநாள் வரை நஷ்டஈடு வழங்கவில்லை. ஆகவே கரும்புக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்று வற்புறுத்த வேண்டாம். முருக்கம்பாடியில் சுடுகாடு வசதி இல்லை. உடனே செய்து தர வேண்டும்.

கலெக்டர்: உளுந்துக்கு இழப்பீட்டு தொகை கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். கரும்பு நல்ல முறையில் விளைச்சல் ஆனால் சந்தோஷம். எதிர்பாராதவகையில் விளைச்சல் ஆகவில்லையெனில் நஷ்டம். ஆகவே காப்பீடு செய்யுங்கள். முருக்கம்பாடியில் நத்தம் புறம்போக்கு இடத்தை தேர்வு செய்து சுடுகாடு வசதி செய்து தரப்படும்.

விவசாயி ஸ்டாலின்மணி:- தற்போது மாவட்டத்தில் உரிய நேரத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவில்லை. தாமதமாக திறந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்திலே திறக்க வேண்டும். வருகிற ஆண்டில் இருந்து உரிய நேரத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும். கோட்டையாம்பாளையத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அரசு பஸ்களில் ‘பாயிண்ட் டூ பாயிண்ட்’ என்று அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அதை தவிர்த்துவிட்டு அனைத்து பஸ்களிலும் சாதாரண கட்டணம் வசூலிக்க வேண்டும்.

கலெக்டர்: மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் விவகாரத்தில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி நாராயணன்:- திருவக்கரை ஏரியில் 2 மதகுகள் உடைந்து தண்ணீர் வீணாகி செல்கிறது. அதை உடனே சரிசெய்ய வேண்டும்.

கலெக்டர்: பொதுப்பணித்துறையினர் மூலம் ஏற்பாடு செய்யப்படும்.

விவசாயி ஜெயராமன்:- கணையார் பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சாக்குகள் பற்றாக்குறையால் நெல், உளுந்து இவற்றை உடனுக்குடன் மாற்றி விற்பனை செய்ய முடியவில்லை.

கலெக்டர்: ஒவ்வொரு ஏரியாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. கட்டாயம் கணையார் பெரிய ஏரி ஆக்கிரமிப்பும் அகற்றப்படும். உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கூடுதல் சாக்குகள் வாங்க ஏற்பாடு செய்யப்படும்.

விவசாயி ராஜகோபால்:- அரியூர் பெரிய ஊர் என்பதால் அங்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க வேண்டும். ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.

கலெக்டர்: அரியூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைப்பது குறித்து அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்படும். தாலுகா அலுவலகங்களில் விவசாயிகள் சிட்டா அடங்கல் விவரத்தை கொடுத்து ஏரிகளில் வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம்

விவசாயி கலியபெருமாள்:- எந்தவொரு பஸ்சிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள்.

கலெக்டர்: 10 ரூபாய் நாணயம் செல்லும் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது. அந்த நாணயங்களை வாங்க மறுக்கும் கண்டக்டர்கள் மீது போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி கிருஷ்ணமூர்த்தி:- சித்தணி ஏரியில் குடிமராமத்து பணியை முழுமையாக முடிக்கவில்லை.

கலெக்டர்: குடிமராமத்து பணியை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி காத்தவராயன்:- அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு அதிகளவில் விளைபொருட்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே நெரிசலை தவிர்க்க ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் அருகில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

கலெக்டர்: விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதங்கள் நடந்தது.

மேலும் செய்திகள்