லாந்தை கிராமத்தின் ஊருணியில் நந்தி சிலை கண்டெடுப்பு

ராமநாதபுரம் அருகே லாந்தை கிராமத்தில் உள்ள ஊருணியினை தூர்வாரியபோது மிகப்பெரிய நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது.

Update: 2018-02-16 22:15 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ளது வரலாற்று சிறப்பு மிக்கது லாந்தை கிராமம். இங்கு கடந்த 1,200 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியர் காலத்து பெரிய சிவன்கோவில் இருந்துள்ளது. கடந்த 12 அல்லது 14-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் இந்த கோவில் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த ஊரில் உள்ள ஊருணியை கடந்த 80 ஆண்டுகளுக்கு முன் தூர்வாரியபோது 2 அடி உயரம் உள்ள லிங்கம் மற்றும் விநாயகர், நாகர் சிலைகள் கிடைத்துள்ளன.

இந்த சிலைகளை பொதுமக்கள் ஊருணி கரையில் இருந்த வில்வமரத்தின் அடியில் வைத்து வணங்கி வழிபட்டு வருகின்றனர். இதன்பின்னர் இந்த சிலைகளை வேறு இடத்தில் வைத்து கடந்த 1984-ம் ஆண்டு முதல் பொதுமக்கள் வணங்கி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இத்தனை ஆண்டுகாலம் கழித்து தற்போது இந்த ஊருணியை மீண்டும் தூர்வாரியபோது 4 அடி நீளம், 2 அடி உயரம் கொண்ட மண்டியிட்டு படுத்த நிலையில் தலைப்பகுதி உடைந்து கம்பீரமான பெரிய நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டு உள்ளது. மிகப்பெரிய நந்தி சிலையாக இருப்பதால் இந்த பகுதியில் பெரிய கோவில் இருந்தது உறுதியாகி உள்ளது. கோவிலை இடித்தவர்கள் இந்த சிலைகளை ஊருணிக்குள் போட்டு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் முத்துராமு கூறியதாவது:- இந்த பகுதியில் கிடைத்துள்ள சிலைகளை வைத்து இங்கு 1,200 ஆண்டுகளுக்கு முன்னர் கோவில் இருந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. ஸ்ரீஏகாம்பரேசுவரர் கோவில் என்ற பெரிய கோவில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுவதால் அரசு உடனடியாக இந்த பகுதியை ஆய்வு செய்து மேலும் தகவல்களை சேகரிக்க வேண்டும். புதிதாக கோவிலை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்