தாலுகா அலுவலகங்களில் கிராம உதவியாளர்கள் இரவு முழுவதும் காத்திருப்பு போராட்டம்

மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் கிராம உதவியாளர்கள் இரவு முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.;

Update: 2018-02-16 22:00 GMT
வாடிப்பட்டி,

வாடிப்பட்டி வட்டக்கிளை தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பாக சிறப்புக்காலமுறை ஊதியத்தை அகற்றி, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக்கோரி 3 கட்ட போராட்டம் அறிவித்துள்ளனர். அதில் முதல்கட்டமாக நேற்றுமுன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை தாலுகா அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு வட்டக்கிளைதலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். முருகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் அழகுபாண்டி வரவேற்றார்.

அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க செயலாளர் வேல்மயில் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் 52 கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். 2-ம் கட்ட போராட்டம் அடுத்த மாதம் 9-ந்தேதி சென்னை சேப்பாக்கம் சி.ஆர்.ஏ.அலுவலகம் முன்பு குடும்பத்துடன் முறையீடு போராட்டமும், 3-வது கட்டமாக ஏப்ரல் 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 4 நாட்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்த போவதாக முடிவு செய்துள்ளனர்.

இதேபோல திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விடிய விடிய காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் திலகவதி, சகாயராணி, முத்துமாரி, பெருமாள், வயக்காட்டு முருகன், சோனை, ஆறுமுகம், கருப்பையா உள்பட ஏராளமான கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்