செஞ்சி கிளை சிறையில் பரபரப்பு கழுத்தை அறுத்து கைதி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை

செஞ்சி கிளை சிறையில் கைதி ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2018-02-16 21:30 GMT
செஞ்சி

செஞ்சி அருகே உள்ள தென்புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சம்பத்குமார்(வயது 31). கூலித்தொழிலாளி. இவருக்கு விஜயகுமாரி(29) என்கிற மனைவி உள்ளார். குடி பழக்கத்துக்கு அடிமையான சம்பத்குமார் கடந்த சில மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி சம்பத்குமார் மதுகுடிக்க பணம் தருமாறு தனது மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு விஜயகுமாரி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த இரும்புக்கம்பியால் விஜயகுமாரியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து விஜயகுமாரி கொடுத்த புகாரின்பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, சம்பத்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி செஞ்சி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறையில் இருந்த சம்பத்குமார் திடீரென கழிவறையில் இருந்த இரும்பு வாளியால் கழிவறை டைல்ஸ் கல்லை உடைத்தார். பின்னர் உடைந்த அந்த டைல்ஸ் கல்லை எடுத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். இதனால் அவருடைய கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. இதில் வலி தாங்கமுடியாமல் அலறித்துடித்த அவரை சிறைக்காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து கிளை சிறை அலுவலர் சரவணன் செஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத்குமாருடன் சிறையில் தங்கி இருந்த கைதிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த சில நாட்களாக சம்பத்குமார் தனது மனைவியே தன்னை சிறைக்கு அனுப்பி விட்டதாக சக கைதிகளிடம் கூறி புலம்பி வந்தது தெரிந்தது. மேலும் அவர் தன்னை மனைவி சிறைக்கு அனுப்பி விட்டாரே என விரக்தியடைந்து தற்கொலைக்கு முயன்றதும் தெரிந்தது. சிறைச்சாலையில் கைதி ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் செஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்