சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டம் 135 பேர் கைது

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த 135 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-02-16 01:45 GMT
விழுப்புரம்,

34 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சட்டரீதியான ஓய்வூதியமும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமும் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடையாக குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு நேற்று காலை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். நாகராஜன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் தேசிங்கு, மாநில செயற்குழு உறுப்பினர் விஜயா ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். மாநில துணைத்தலைவர் சாவித்திரி சிறப்புரையாற்றினார். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தினால் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர்கள் ராஜன், காமராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 105 பெண்கள் உள்பட 135 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்