பாப்ஸ்கோ ஊழியர்கள் சட்டசபையை முற்றுகையிட முயற்சி 330 பேர் கைது

நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி சட்டசபையை முற்றுகையிட முயன்ற பாப்ஸ்கோ ஊழியர்கள் 330 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-02-16 00:10 GMT
புதுச்சேரி,

பாப்ஸ்கோ ஊழியர் மற்றும் தொழிலாளர் நல சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் 13 மாத சம்பள பாக்கியை வழங்க வேண்டும், குடிமைப் பொருள் வழங்கல் துறையின் கீழ் தங்களுக்கு மாதந்தோறும் காலதாமதம் இல்லாமல் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8-ந் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கோரிக்கைளை வலியுறுத்தி சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக கம்பன் கலையரங்கம் அருகே நேற்று காலை கூடினர். பின்னர் அங்கிருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர். ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.

இந்த ஊர்வலம் அண்ணாசாலை, நேருவீதி, மிஷன்வீதி வழியாக மாதா கோவில் வீதியை அடைந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசாரின் தடுப்பை மீறி சட்டசபை நோக்கி செல்ல அவர்கள் முயற்சி செய்தனர்.

இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 165 பெண்கள் உள்பட 330 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்