திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த 8 நைஜீரியர்கள் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-02-15 22:53 GMT
அனுப்பர்பாளையம்,

திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் பனியன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்களும் தங்கி இருந்து பனியன் வர்த்தகத்தில் ஈடுபட்டுகிறார்கள்.

இப்படி திருப்பூரில் தங்கி இருக்கும் நைஜீரியர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்து வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த கே.ஜி.நகரில் தங்கி இருந்து பனியன் வர்த்தகத்தில் ஈடுப்பட்டு வரும் நைஜீரியர்கள் சிலரிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்றும், அவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகவும் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் நாகராஜன் உத்தரவின் பேரில் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு தலைமையில் போலீசார் நேற்று காலை நைஜீரியர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கிருந்த 6 நைஜீரியர்களை அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்களிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லை என்றும், அவர்களுடைய சொந்த நாட்டில் வழங்கப்பட்ட அடையாள அட்டையும் இல்லை என்றும் தெரியவந்தது.

இதையடுத்து நுவான்க்பே ஒனேகாக் (வயது 31), நிக்கோலஸ் உச்சேனா யூசிப் (38), ஒனாஜிடே (31), நெல்சன் ஓ பேக்போ (32), நுவோனு ஓ க்வூடி (34), டாய் டினேபில்சி (35) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருப்பூர் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இதேபோல் திருப்பூர் ராயபுரம் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்து பனியன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த ஸ்டீபன் (30), ஜான்சன் (32) ஆகியோரை வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியர்கள் 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்