சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 235 பேர் கைது

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 235 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-02-15 22:45 GMT
திருப்பூர்,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது. அந்த வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக அந்த சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதன்படி நேற்று காலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பு கூடினார்கள். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபடாமல் இருப்பதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். அங்கு கூடிய சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுசீலா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பால்ராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணை தலைவர் ஞானதம்பி, மாவட்ட தலைவர் பாஸ்கரன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் அம்சராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முருகேசன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்புறம் உள்ள பல்லடம் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி கோஷங்களும் எழுப்பினார்கள். அப்போது சிலர் ரோட்டில் படுத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து போக அறிவுறுத்தினார்கள். இருப்பினும் அவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நீடித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து கலைந்து போக செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதன்படி 20 ஆண்கள் உள்பட மொத்தம் 235 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

மேலும் செய்திகள்