மாணவ-மாணவிகள் சங்கீதத்தை பக்தியுடன் கற்றுக்கொள்ள வேண்டும் கவர்னர் வஜூபாய் வாலா பேச்சு

மாணவ-மாணவிகள் சங்கீதத்தை பக்தியுடன் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மைசூரு சங்கீத பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் வஜூபாய் வாலா கூறினார்.;

Update: 2018-02-15 22:00 GMT
மைசூரு,

மாணவ-மாணவிகள் சங்கீதத்தை பக்தியுடன் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மைசூரு சங்கீத பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் வஜூபாய் வாலா கூறினார்.

பட்டமளிப்பு விழா

மைசூரு டவுன் கிருஷ்ணமூர்த்திபுரத்தில் டாக்டர் கங்குபாய் ஆனகல் சங்கீத பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் 3-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்து கொண்டு 29 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும் சிறந்த மாணவர்கள் தங்கப் பதக்கம், ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதையடுத்து சங்கீதத்தில் சாதனை படைத்தவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் விருதுகளை வழங்கி கவர்னர் கவுரவித்தார். மேலும் பத்மஸ்ரீ விருதுபெற்ற டாக்டர்.சத்தியநாராயணாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதையடுத்து விழாவில் கவர்னர் வஜூபாய் வாலா பேசியதாவது:-

சங்கீதத்தை கற்றுக் கொள்ள வேண்டும்

சங்கீதத்தில் சாதனை புரிவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. அதை மாணவ-மாணவிகள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சங்கீதம் நம் நாட்டின் கலாசாரம், பாரம்பரியம், பரம்பரை, வரலாறு உள்ளிட்டவற்றை எடுத்துக் காட்டுகிறது. அதனால்தான் சங்கீதத்திற்கு மக்கள் மனதில் உன்னதனமான இடம் இருக்கிறது. மாணவ-மாணவிகள் சங்கீதத்தை பக்தியுடன் கற்றுக் கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளில் இந்தியாவின் சங்கீதத்திற்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இன்றைய நவீன யுகத்தில் மக்களிடையே சங்கீதத்திற்கான ஆர்வம் கொஞ்சம் குறைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும் மக்களுக்கு ஒருவித ஆறுதலாக இருப்பது சங்கீதம் மட்டுமே. ஆதலால் அதிக எண்ணிக்கையிலான மாணவ-மாணவிகள் சங்கீதத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கவர்னர் வஜூபாய் வாலா பேசினார்.

துணை வேந்தர்

விழாவில் பல்கலைக்கழக துணை வேந்தர் சர்வமங்களா, பதிவாளார் நிரஞ்ஜன வாணள்ளி, பேராசிரியர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்