விவசாயிகள் வேளாண்துறை திட்டங்களை பெற்று பயன் பெற வேண்டும் கலெக்டர் பேச்சு
விவசாயிகள் வேளாண்துறை திட்டங்களை பெற்று பயன் பெற வேண்டும் என்று கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் பெரும்பாக்கம் மற்றும் பூண்டி ஒன்றியம் கொழுந்தலூர், மோவூர், சிறுவானூர் கண்டிகை, வேளகாபுரம், ஆலங்காடு, கடம்பத்தூர் ஒன்றியத்தில் வெண்மனம்புதூர், ஆட்ரம்பாக்கம் போன்ற பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண்துறை சார்பாக விவசாயிகளுக்கு பல்வேறு திட்டப்பணிகள் மானிய விலையில் அரசே செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி திட்டத்தில் பல்வேறு சலுகைகள், மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் 43 லட்சம் கரும்பு கன்றுகள் நடவுக்கு தேவைப்படுகிறது.
கரும்பு கன்றுகள்
வேளாண்துறை சார்பாக திருந்திய சாகுபடி முறையில் ரூ.75 ஆயிரம் மானியத்தில் கரும்பு கன்றுகளை குடில்கள் அமைத்து வளர்க்கும் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. கொழுந்தலூர் விதைப்பண்ணையில் விவசாயிகளுக்கு தேவைப்படும் விதை நெல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 1,500 மெட்ரிக்டன் அளவுக்கு தரமான விதை நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த விதை நெல் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
இந்த கொழுந்தலூர் விதைப்பண்ணை 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நெற்பயிர் 451 விதை நெல் வகைகளும், உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. வேளாண்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் விவசாயிகள் பெற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது வேளாண் துணை இயக்குனர் எபினேசர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பிரதாப்ராவ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் முத்துதுரை, வேளாண்மை உதவி இயக்குனர் கலாதேவி, திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.