பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

கும்பகோணம் அருகே பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக நிழற்குடை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஓட்டல் உரிமையாளர், மனைவியுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-02-15 22:45 GMT
திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி மெயின் ரோட்டில் பழமையான பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் அங்கு புதிய பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாரதிமோகன் எம்.பி. தனது தொகுதி நிதியில் இருந்து ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து புதிய பயணிகள் நிழற்குடை கட்ட டெண்டர் விடப்பட்டது.

அந்த பயணிகள் நிழற்குடை அருகே கண்ணன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணிகள் தொடங்க வந்தபோது ஒப்பந்ததாரருக்கும், கண்ணனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் நிழற்குடை கட்டும் பணிகள் தொடங்க முடியவில்லை. இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கண்ணனின் ஓட்டலுக்கு வந்த விறகுகள், பயணிகள் நிழற்குடை உள்ள இடத்தில் கொட்டப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள், பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்துள்ள கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கும்பகோணம்-திருவாரூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலைமறியல் போராட்டம் காரணமாக கும்பகோணம்-திருவாரூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து நாச்சியார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்தபோது கண்ணன் தனது மனைவி வள்ளியுடன் இந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மண்எண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்