பூட்டிய வீட்டில் 11 பவுன் நகை, ரூ.90 ஆயிரம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு

பாரூர் அருகே பூட்டிய வீட்டில் 11 பவுன் நகை மற்றும் ரூ.90 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-02-15 22:45 GMT
காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே பாரூர் பக்கமுள்ளது இந்திரா நகர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். கட்டிட காண்டிராக்டர். இவர் குடும்பத்துடன் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார். கடந்த வாரம் ஊரில் நடந்த திருவிழாவிற்கு இவர் குடும்பத்துடன் வந்தார். பின்னர் 2 நாட்கள் இருந்து விட்டு மீண்டும் பெங்களூருவுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை முருகனின் வீட்டு கதவு திறந்து கிடந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் முருகனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் விரைந்து வந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்து துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 11 பவுன் நகை, ரூ.90 ஆயிரம் மற்றும் முக்கிய ஆவணங்களும் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து முருகன் பாரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம ஆசாமிகள் வீட்டை ஒட்டி உள்ள பாத்ரூம் வழியாக மேலே ஏறி, சமையல் அறை புகைகூண்டு வழியாக உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடிச்சென்றதும், கதவை உடைத்து கொண்டு வெளியே தப்பிச்சென்றதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள், பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்