காளை விடும் திருவிழா மாடுகள் முட்டியதில் வேடிக்கை பார்த்த 140 பேர் காயம்

விரிஞ்சிபுரத்தில் நேற்று காளைவிடும் விழா கோலாகலமாக நடந்தது. இதில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள் முட்டி தள்ளியதில் 140 பேர் காயமடைந்தனர்

Update: 2018-02-15 22:45 GMT
அணைக்கட்டு,

வேலூர் அருகே விரிஞ்சிபுரத்தில் நேற்று காளை விடும் திருவிழா நடந்தது. இதில் கலந்து கொள்ள வேலூர், வாணியம்பாடி, ஆலங்காயம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து 200 காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. காளைகளை விரட்டுவதற்கும் காளை மீது கையை போடுவதற்கும் இளைஞர்கள் திரண்டிருந்தனர். அதேபோல் காளைகள் சீறிப்பாய்வதை பார்ப்பதற்காக பொதுமக்களும் திரண்டிருந்தனர். அவர்கள் வீடுகளின் முன்பும், வீட்டின் மாடிகளிலும், 70 அடி உயரத்தில் உள்ள கோவில் கோபுரம் மீதும் நின்று வேடிக்கை பார்த்தனர்.

காளை விடும் திருவிழா தொடங்குவதற்கு முன்பு பொய்கை கால்நடை மருத்துவர் அனுமந்த் மற்றும் உதவி மருத்துவர்கள் காளைகளை பரிசோதித்த பிறகே போட்டியில் கலந்து கொள்ள அனுமதித்ததனர்.

காளை விடும் விழாவை வேலூர் உதவி கலெக்டர் செல்வராஜ், தாசில்தார் குமார், உதவி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து வாடிவாசலில் இருந்து தெருவில் காளைகள் விடப்பட்டன. அவை போட்டி போட்டுக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக சீறி பாய்ந்து ஓடின.

இளைஞர்களின் ஆரவாரத்தில் காளைகள் மிரண்டு தெருவில் அங்கும் இங்குமாக ஓடின. சில காளைகள் பாதுகாப்பு தடுப்பு கம்புகளை தாண்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வாலிபர்களை முட்டி தூக்கி வீசியது. இதில் 140-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அதில் படுகாயம் அடைந்த 6 பேர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மற்றவர்களுக்கு அங்கேயே ஒடுகத்தூர் மற்றும் ஊசூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் பார்த்திபன், வினோத், சாந்தினி, சுகாதார செவிலியர் ஷீலா தலைமையிலான மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

140-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததால், அரைமணி நேரம் காளை விடும் திருவிழா நிறுத்தப்பட்டது. மீண்டும் உதவி கலெக்டர் அனுமதியுடன் பிற்பகல் 3 மணி வரை காளை விடும் விழா நடந்தது.

முதல் பரிசு ரூ.2 லட்சம் உள்ளிட்ட 52 பரிசுகளை வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு அணைக்கட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. நந்தகுமார் வழங்கினார்.

போட்டியில் கலந்து கொண்டு ஓடிய காளைகள் தெருவில் விழுந்து காயமடைந்தன. அந்த காளைகளுக்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். வருவாய் ஆய்வாளர் சத்தியா, கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்