கந்து வட்டி கொடுமையால் கட்டிட ஒப்பந்ததாரர் தற்கொலை போலீசார் விசாரணை

குடியாத்தத்தில் கந்து வட்டி கொடுமையால் கட்டிட ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-02-15 23:00 GMT
குடியாத்தம்,

குடியாத்தம் பாண்டியன் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது 52), கட்டிட ஒப்பந்ததாரர். இவரது மனைவி மேகலா. தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நேற்று காலை ஸ்ரீதரன் மனைவியை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த மகளிடம் மாடியில் ஓய்வு எடுக்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

மதிய உணவுக்காக மகள் தந்தையை எழுப்ப சென்றார். அப்போது மாடியில் ஸ்ரீதரன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரது அறையில் சோதனையிட்டபோது ஸ்ரீதரன் எழுதிய கடிதம் இருந்தது. அதில் ‘நான் நம்பியவர்கள் எல்லாம் எனக்கு துரோகம் செய்து விட்டார்கள். என் மரணத்திற்கு காரணம் ஆனவர்களை சும்மா விடாதீர்கள், கந்து வட்டி கொடுமை காப்பாற்ற வேண்டும்’ என இருந்தது.

இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்