பஸ் கட்டண உயர்வை கண்டித்து பொதுக்கூட்டம் திருச்சி சிவா எம்.பி. பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேசினார்.

Update: 2018-02-15 22:30 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்பிரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஜாபர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் நூர்முகமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன், விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கனியமுதன், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கோபிநாத், விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க நகர செயலாளர் நவாப் வரவேற்று பேசினார்.

இவ்வளவு போராட்டம், ஆர்ப்பாட்டம், கண்டன பொதுக்கூட்டத்திற்கு பிறகும் பஸ் கட்டணத்தை குறைக்காவிட்டால், இந்த ஆட்சியை இறக்க வேண்டியதை தவிர வேறு வழியில்லை என மக்கள் முடிவுக்கு வந்துவிட்டார்கள். போக்குவரத்து இல்லையென்றால் எதுவும் இல்லை. லாப நோக்கத்தோடு அரசு போக்குவரத்து கழகத்தை நடத்த முடியாது. ஒரு சேவையாக தான் நடத்த வேண்டும். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள், தற்போது பஸ் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு போக்குவரத்து கழகத்தை மக்களை வாட்டாமல், வதைக்காமல், நஷ்டம் ஏற்படாமல் எப்படி தடுக்க முடியும் என்பதை தி.மு.க ஒரு குழு அமைத்து, அந்த குழு அறிக்கையினை தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமியிடம், எதிர்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். அதை முதல்-அமைச்சர் பின்பற்ற வேண்டும். மொத்தத்தில் தமிழகத்தில் சரியான ஆட்சி நடைபெறவில்லை. எனவே, சரியானவர்கள் கையில் ஆட்சியை கொடுத்தால் அனைவரும் நிம்மதியாக இருக்க முடியும் என்பதை உணர வேண்டும். எதிர்காலம் ஒளிமயமாக மாற வேண்டும் என்றால் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பின்னால் அனைவரும் அணி திரண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில், தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், மாநில மகளிர் அணி தலைவர் டாக்டர். காஞ்சனா கமலநாதன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பொன்.குணசேகரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அமீன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், கோவிந்தசாமி, காவேரிப்பட்டணம் பேரூர் கழக செயலாளர் பாபு நிர்வாகிகள் அஸ்லாம், ரஜினிசெல்வம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்