போலீசாரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

போலீசாரை கண்டித்து பொதுமக்கள்- மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-02-15 23:00 GMT
திருச்சி,

திருச்சி உய்யகொண்டான் திருமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன சோதனையில் ஈடுபட்ட அரசு மருத்துவமனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையிலான போலீசார், அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த என்ஜினீயர் பாலசந்தர், அவருடைய நண்பர் எம்.டெக். மாணவரான சந்தோஷ் ஆகியோரை வழிமறித்து அவர்களிடம் ஹெல்மெட் ஏன் அணியவில்லை? ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா? என்று கேட்டுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீசார் இருவரையும் தாக்கினர். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசாரைக்கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக அதே பகுதியை சேர்ந்த 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை கண்டித்து நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உய்யகொண்டான் திருமலை பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் திடீரென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமை தாங்கினார்.

தாக்குதல் நடத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலை பணிநீக்கம் செய்ய வேண்டும், 10 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்கு களை போலீசார் திரும்ப பெற வேண்டும். இது தொடர்பாக நீதிபதி தலைமையில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அவர்களிடம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று கூறினர். இதனை தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று, அங்கு இருந்த கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவியிடம் கோரிக்கை தொடர்பாக மனு ஒன்றை கொடுத்தனர். இதேபோல் திருச்சி கோர்ட்டில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிலும் மனு கொடுத்தனர். 

மேலும் செய்திகள்