பயிர் இன்சூரன்சு தொகை ரூ.5 கோடி மோசடி: வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

பயிர் இன்சூரன்சு தொகை ரூ.5 கோடி மோசடி செய்த வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுரை ஐகோர்ட்டில் விவசாயி வழக்கு.

Update: 2018-02-15 21:30 GMT
மதுரை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சக்கூரை சேர்ந்த விவசாயி மரகதம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்கள் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் கடந்த ஆண்டு (2016-17) அவரவருக்கு சொந்தமான நிலங்களில் நெல் பயிரிட்டோம். இதனையடுத்து முறையாக சக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முறையாக பயிர் இன்சூரன்சு செய்தோம். அதற்கான பிரீமிய தொகையை உரிய நேரத்தில் செலுத்தி வந்தோம். பின்னர் எங்களது பயிர் இன்சூரன்சு கணக்கு பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா இன்சூரன்சு திட்டத்தில் சேர்க்கப்பட்டது.

ஆனால் போதிய மழையின்றி நெற்பயிர்கள் கருகிவிட்டன. இதனால் இழப்பு ஏற்பட்டது தொடர்பாக நிலத்தில் அளவீடு செய்யப்பட்டது. 95 சதவீத சாகுபடி பொய்த்துப்போன நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரத்து 990-ஐ இழப்பீட்டு தொகையாக நிர்ணயம் செய்தனர். ஆனால் எங்களுக்கு சேர வேண்டிய இன்சூரன்சு தொகையை வழங்காமல் இழுத்தடித்தனர்.

இதுகுறித்து விசாரித்தபோது நாங்கள் கூட்டுறவு சங்கத்தில் செலுத்திய இன்சூரன்சு பிரீமிய தொகையை சம்பந்தப்பட்ட இன்சூரன்சு நிறுவனத்துக்கு செலுத்தாதது தெரியவந்தது. சக்கூர் கூட்டுறவு சங்கத்தில் 15-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் இன்சூரன்சு செலுத்தி வந்துள்ளனர். இவர்கள் செலுத்திய சுமார் ரூ.5 கோடியை கூட்டுறவு சங்கத்தினர் மோசடி செய்துள்ளனர்.

எனவே சங்க நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிக குற்றப்புலனாய்வு போலீசில் புகார் செய்தும் பரிசீலிக்கவில்லை. எனவே மோசடி செய்த தொகையை மீட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், எங்களுக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து பயிர் இழப்பீட்டு தொகையை வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு குறித்து நிதித்துறை செயலாளர், சிவகங்கை கலெக்டர், சக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்