ரூ.1.16 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு

புதுச்சத்திரம் ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2018-02-15 22:15 GMT
நாமக்கல்,

புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மின்னாம்பள்ளி, கலங்காணி, காரைக்குறிச்சி, திருமலைப்பட்டி, கண்ணூர்பட்டி, கதிராநல்லூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன் தொடக்கமாக மின்னாம்பள்ளி ஊராட்சி புதன்சந்தை வளாகத்தில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சிகூட கட்டுமான பணி, களங்காணி ஊராட்சி அருந்ததியர் காலனியில் இதே திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் உதவியுடன் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.

மேலும் திருமலைப்பட்டி ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, இதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து பராமரிக்கும் பணி என்பன உள்பட ரூ.1 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அனைத்து பணிகளையும் தரமாகவும், தாமதமின்றி விரைவாகவும் குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகரன், சண்முகசுந்தரம், ஒன்றிய பொறியாளர் பாண்டியன், உதவி பொறியாளர் அருண் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்