தேவகோட்டை அருகே மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்; 7 பேர் படுகாயம்

தேவகோட்டை அருகே இருமதி திருவிழாவையொட்டி கிராமத்தில் கோவில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

Update: 2018-02-15 21:30 GMT
தேவகோட்டை

தேவகோட்டை அருகே உள்ளது இருமதி கிராமம். இங்கு பிரசித்திபெற்ற காளி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரியையொட்டி திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்துடன் மஞ்சுவிரட்டு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான மாசி மகா சிவராத்திரி திருவிழா இருமதி காளி கோவிலில் 2 நாட்கள் நடைபெற்றது. திருவிழாவில் இருமதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து திருவிழாவையொட்டி நேற்று இருமதி கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக இருமதி மாரியம்மன் கோவிலில் இருந்து நாட்டார் அழைப்பு நடைபெற்றது. இருமதி துரை.கருணாநிதி அம்பலம் தலைமையில் நாட்டார்கள் அழைத்து செல்லப்பட்டு மஞ்சுவிரட்டு தொழுவத்தை அடைந்தனர்.

பின்னர் ராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி, ராணி லட்சுமி நாச்சியார் தலைமையில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக கோவில் காளைகள் உரிய மரியாதையுடன் அழைத்துவரப்பட்டு தொழுவத்தில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. பின்னர் மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்த காளைகளை ஏராளமான மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்கினர். இதில் சில காளைகள் சிக்கின. பல காளைகள் வீரர்களுக்கு போக்கு காட்டிவிட்டு தப்பின. சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 200 காளைகள் அழைத்துவரப்பட்டு அவிழ்த்துவிடப்பட்டன. இந்த மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 7 பேர் படுகாயமடைந்தனர்.

தேவகோட்டை சப்-கலெக்டர் ஆஷா அஜீத் மேற்பார்வையில் தாசில்தார் சிவசம்போ, தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மாலினி, சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக மஞ்சுவிரட்டிற்கு பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்த போதிலும், உரிய பயிற்சி எடுத்த மாடுபிடி வீரர்கள் மட்டுமின்றி பார்வையாளராக வந்திருந்த ஏராளமானோர் கூட்டமாக நின்று காளைகளை அடக்கினர். அப்போது தொழுவத்தில் இருந்து சீறிய காளைகளை அவர்கள் கூட்டமாக பிடிக்க முயன்றதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை அப்புறப்படுத்தினர். இதேபோல் 3 முறை தடியடி நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்