தீராத சிக்கலில் கச்சத்தீவு
கச்சத்தீவு... இந்தியா-இலங்கைக்கு இடையே கடற்பரப்பில், ராமேசுவரத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் (12 கடல் மைல்) தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவிலும் பாக் ஜலசந்தி பகுதியில் அமைந்துள்ள முட்டை வடிவிலான ஆளில்லாத சிறிய தீவு.
கச்சத்தீவு மொத்தம் 285.2 ஏக்கர் பரப்பளவே கொண்டது. இந்த தீவு, பூமிக்கு வெளியே சிறகடித்துக் கொண்டிருக்கும் செயற்கைகோள் கேமராவின் கண்களுக்கு கடுகு போன்று காட்சி தருவதாலோ என்னவோ, டெல்லியில் இருந்து ஆளுமை செலுத்தும் மத்திய அரசும் இதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. விளைவு... பாரம்பரியமாக இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு, இலங்கை வசம் சென்று விட்டது. இந்திய மண், இன்னொரு நாட்டுக்கு சொந்தமாகிவிட்டது.
இன்றைக்கு கச்சத்தீவில் ஆண்டுதோறும் நடைபெறும் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்பதற்குக்கூட, கடுமையான விதிமுறைகளை விதித்து, தமிழக பக்தர்கள் வேற்றுக் கிரகவாசிகளை போல நடத்தப்படுகிறார்கள். இந்த ஆண்டு, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா இம்மாதம் 23, 24-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 2,100 பக்தர்கள் தங்களின் பெயர், விவரங்களை பதிவு செய்துள்ளனர். பக்தர்கள் பயணம் செய்வதற்காக 62 விசைப்படகுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் இருந்தும் 6 ஆயிரம் பக்தர்கள் கச்சத்தீவுக்கு வர இருக்கின்றனர்.
கடந்த ஆண்டு வரை, அண்டை மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களிடம் மட்டும் தான் போலீஸ் தடையில்லா சான்று கேட்கப்பட்டது. இந்தமுறை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் கூட, போலீஸ் தடையில்லா சான்று அளிக்க வேண்டும் என்று விதிமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு படகுகளிலும் 35 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. திருவிழா முடிந்த உடனே ராமேசுவரம் திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு நாள் பொழுதுக்குள் திருவிழா முடிந்துவிடுகிறது. மீண்டும் கச்சத்தீவு மண்ணில் தமிழர்கள் கால் பதிக்க ஆசைப்பட்டால், அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.
சரி.. கச்சத்தீவு உண்மையிலேயே யாருக்கு சொந்தமானது என்பதை அறிந்துகொள்ள, வரலாற்று புத்தகத்தின் பக்கங்களை திருப்பி பார்த்தாக வேண்டி உள்ளது.
கச்சத்தீவு... 1480-ம் ஆண்டில் ஏற்பட்ட பெரிய அளவிலான கடல் கொந்தளிப்பின்போது உருவான தீவுகளுள் ஒன்று. இந்த தீவை சுற்றி மீன்வளம் அதிகம் இருந்ததால், அதை தமிழக மீனவர்கள் அட்சய பாத்திரமாகவே கருதினார்கள். 1685-ம் ஆண்டு சேது நாட்டின் தலைநகரமாக ராமநாதபுரம் இருந்தபோது ரகுநாத சேதுபதி மன்னரின் கட்டுப்பாட்டில் கச்சத்தீவு இருந்தது. தொடர்ந்து மன்னர்களின் ஆளுகையின் கீழ் இருந்த சேது நாடு, 1795-ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.
கச்சத்தீவும் அவர்களின் பார்வையில் இருந்து தப்பவில்லை. 1803-ம் ஆண்டு ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட சொத்துப் பட்டியலில் கச்சத்தீவும் இடம்பெற்றிருந்தது. அதன்பிறகு, 1949-ம் ஆண்டு வரை பல்வேறு காலக்கட்டங்களில் கச்சத்தீவு குத்தகைக்கு விடப்பட்டு வந்தது. 1947-ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற நிலையில், கச்சத்தீவு இந்திய அரசின் வசமே இருந்தது.
1949-ம் ஆண்டு கச்சத்தீவு பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இலங்கை அரசு, “கச்சத்தீவு எங்களுக்குத்தான் சொந்தம்” என்று தடாலடியாக உரிமைக்கொண்டாட தொடங்கியது. அதோடு நில்லாமல், 1956-ம் ஆண்டு தனது விமானப்படை வீரர்களுக்கு கச்சத்தீவில் வைத்து பயிற்சி அளிக்கவும் தயாரானது. இதற்கு இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் இந்திய பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. ஆனால், அப்போதைய பிரதமர் நேரு இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. “கச்சத்தீவு பற்றிய போதுமான தகவல்கள் அரசின் வசம் இல்லை. அதைப் பற்றிய குறிப்பேடுகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்” என்று பாராளுமன்றத்திலேயே அவர் தெரிவித்தார்.
நேருவின் மறைவுக்கு பிறகு 1966-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற அவரது மகள் இந்திராகாந்தியும், கச்சத்தீவு விஷயத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இத்தகைய நிலையில், தமிழக மீனவர்களுக்கு பேரிடி ஒன்று விழுந்தது. 1974-ம் ஆண்டு ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் இந்தியா-இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. நாடே கொந்தளித்து எழுந்தபோதும், இந்திய அரசின் முடிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன்பிறகு, படிப்படியாக கச்சத்தீவு நம்மைவிட்டு கைநழுவிச் சென்றது. அந்தப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக இலங்கையின் பாதுகாப்பு வளையத்திற்குள் கச்சத்தீவு சென்றது.
கச்சத்தீவு இந்தியாவுக்குத்தான் சொந்தம் என்பதற்கு மேலும் ஒரு ஆதாரமும் இருக்கிறது. அங்குள்ள அந்தோணியார் ஆலயத்தை கட்டியதே தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர் ஒருவர்தான். 1913-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள நம்புத்தாழை என்ற சிற்றூரை சேர்ந்த சீனிக்குப்பன் படையாட்சி என்ற மீனவர் தான் இந்த ஆலயத்தை கட்டியிருக்கிறார். புயலில் சிக்கிய தன்னையும், தனது படகையும் பத்திரமாக கரைசேர்த்தால் ஆலயம் கட்டுவதாக அந்தோணியாரை அவர் வேண்டி இருந்தார். பத்திரமாக கரை சேர்ந்ததால், தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கச்சத்தீவில் ஆலயத்தை எழுப்பினார்.
ஆனால், இன்றைக்கு அந்த ஆலயம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கச்சத்தீவே இலங்கை வசம் சென்றுவிட்டது. அரை நூற்றாண்டை கடந்தும் கச்சத்தீவு பிரச்சினை கன்னித்தீவு கதைபோல முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது. எப்போதெல்லாம் தமிழக மீனவன் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகிறானோ, அப்போதெல்லாம் இங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கச்சத்தீவு பிரச்சினையை கையில் எடுப்பார்கள். அதன்பிறகு, அதை மறந்துவிட்டு வேறு பிரச்சினைக்கு தாவிவிடுவார்கள்.
கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டபோது போடப்பட்ட ஒப்பந்தம் செல்லாது என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருந்தாலும், இங்கே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் எலியும், பூனையுமாகத்தான் மோதிக் கொள்கிறார்கள். கச்சத்தீவை தாரைவார்த்ததற்கு யார் காரணம்? என்று அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சட்டமன்றத்தில் மோதிக்கொள்ளும் சம்பவங்கள்தான் நடக்கின்றன. மாறாக, இந்த விஷயத்தில் இருக்கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய அரசை வலியுறுத்துவோம் என்ற ஒருமித்த கருத்து எப்போதுமே வந்ததில்லை. இதனால்தான், நமக்கு சொந்தமான கச்சத்தீவு கனவுத் தீவாக மங்கி மறைந்து கொண்டிருக்கிறது.
ஆனால், கச்சத்தீவும், அதில் மீன்பிடிக்கும் உரிமையும், வலைகளை உலர்த்தி ஓய்வெடுக்கும் வாய்ப்பும் பறிபோனதால் ஏற்படும் வலியை, தமிழக மீனவர்களால் மட்டுமே உணர முடியும். எனவே, இனியும் அமைதி காக்காமல் கச்சத்தீவு பிரச்சினையின் வீரியத்தை உணர்ந்து, அதை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் இறங்க வேண்டும். அப்போதுதான், இந்தியாவின் நேச கரங்களில் கச்சத்தீவு தவழும் காலம் கனியும்.
-ஆர்.கே.