தானேயில் ரூ.2¼ லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் கொத்தனார் கைது

தானேயில், ரூ.2¼ லட்சம் கள்ளநோட்டுகள் வைத்திருந்த கொத்தனார் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-02-14 22:40 GMT
மும்பை,

தானேயில், ரூ.2¼ லட்சம் கள்ளநோட்டுகள் வைத்திருந்த கொத்தனார் கைது செய்யப்பட்டார்.

கள்ளநோட்டுகள்

தானேயில் உள்ள ஒரு கல்லூரி அருகே நேற்றுமுன்தினம் மாலை சந்தேகத்திற்கிடமாக ஒருவர் நடமாடிக்கொண்டிருந்தார். இதுபற்றி தானே குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று, அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனையிட்டபோது, ரூ.2 ஆயிரம், ரூ.500, ரூ.100 நோட்டுகள் கத்தை, கத்தையாக இருந்தன. அந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து போலீசார் ஆய்வு செய்து பார்த்தபோது, அவை அனைத்தும் கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து, அந்த நபரை அதிரடியாக கைது செய்தனர்.

கொத்தனார் கைது

பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகளை எண்ணி பார்த்தபோது, மொத்தம் ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்து 200-க்கான நோட்டுகள் இருந்தன. விசாரணையில், கள்ளநோட்டுகளுடன் பிடிபட்டவர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் பகுதியை சேர்ந்த பிரகாஷ் பிரசா(வயது42) என்பதும், தற்போது தானே வாக்ளே எஸ்டேட்டில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் இவர் தானேயில் கொத்தனாராக வேலை பார்த்து வருவதாக கூறினார்.

போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கள்ள ரூபாய் நோட்டுகள் அவருக்கு எப்படி கிடைத்தது, அதை யாரிடம் கொடுப்பதற்காக கொண்டு வந்தார்? என்பதை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்