கோயம்பேடு மார்க்கெட்டில் கொட்டப்படும் காய்கறி கழிவுகளால் சுகாதார சீர்கேடு
கோயம்பேடு மார்க்கெட்டில் கொட்டப்படும் காய்கறி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
கோயம்பேடு,
சென்னை கோயம்பேட்டில் சுமார் 100 ஏக்கர் பரப்பில் பூ, காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டுகள், உணவு தானிய கிடங்கு வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன.
இவை மார்க்கெட்டில் உள்ள 14 நுழைவுவாயில்கள் வழியாக வந்து செல்கின்றன. மார்க்கெட்டிற்குள் நுழையும் வாகனங்கள் சோதனை செய்யப்படுவதில்லை. நுழைவு கட்டணம் மட்டும் வசூலித்து விட்டு உள்ளே அனுமதிக்கப்படுகிறது. இது மிக ஆபத்தான நடைமுறை என்று சில அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே பிரதான நுழைவு வாயில்களில், ‘ஸ்கேனிங்’ கருவிகள் பொருத்தி, சோதனை செய்த பின்னரே வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அசம்பாவிதம் நடந்தபின்னர் பாதுகாப்பை பலப்படுத்துவதை விட, வருமுன் காப்பதே சிறந்தது என்று அவர்கள் கருதுகிறார்கள்.
சுகாதார சீர்கேடு
மேலும், மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளின் பின்புறத்தில் கழிவுகளை கொட்டும் இடம் இருந்தாலும், அந்த இடத்தை வியாபாரிகள் காய்கறிகளை இருப்பு வைக்க பயன்படுத்துவதால் கழிவுகள் வெளியில் கொட்டப்படுகின்றன.
இந்த கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படாததால் அழுகி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. எனவே காய்கறி கழிவுகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பாதுகாப்பு குறைபாடு
இதேபோல் கோயம்பேடு பஸ் நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் சுகாதார அம்சங்கள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பஸ் நிலைய வளாகத்தில் பயணிகள் பயன்பாட்டிற்கு 8 நுழைவு வாயில்கள் உள்ளது. மேலும் பஸ், ஆட்டோ, கார்கள், மாநகர பஸ்களுக்கு 6 நுழைவு வாயில்கள் உள்ளன.
சுமார் 37 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பஸ் நிலையம் முழுவதையும் கண்காணிக்க, 80 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அச்சுறுத்தல்கள் வரும் நாட்களில் மட்டும் போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்படுவார்கள். மற்ற நேரங்களில் போலீசார் தென்படுவதில்லை.
பாதுகாப்பு குறைபாடு காரணமாக திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. திருடர்களிடம் செல்போன், மடிக்கணினிகளை பறி கொடுத்தவர்கள் அளிக்கும் புகாரை போலீசார் வாங்க மறுப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆயிரக்கணக்கான வெளியூர் மற்றும் மாநகர பஸ்கள் வந்து செல்லும் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இங்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகிறார்கள்.
மேலும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் துப்புரவு பணிகளை சி.எம்.டி.ஏ. ஊழியர்கள் சிறப்பாக செய்தாலும், பயணிகள் மற்றும் பஸ் கண்டக்டர், டிரைவர்கள் நடைமேடையிலேயே சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.