முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் உடல் அடக்கம் ஜி.கே.வாசன் அஞ்சலி

கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்ஜேக்கப் உடலுக்கு, த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து ஜான்ஜேக்கப் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Update: 2018-02-14 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டம் கருங்கல் பாலப்பள்ளம் அருகே உள்ள படுவூரை சேர்ந்தவர் ஜான் ஜேக்கப் (வயது 65). கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் குமரி மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2006, 2011-ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

இவருடைய மனைவி நிர்மலதா. மகன் நிதின் சைமன். மகள் வெர்ஜின்ரோஸ். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப், படுவூரில் உள்ள வீட்டில் மனைவி நிர்மலதா மற்றும் அவருடைய தாயாருடன் வசித்து வந்தார். அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மதியம் வீட்டில் இருந்தபோது ஜான் ஜேக்கப் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் நெய்யூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் மரணம் அடைந்தார். இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்ஜேக்கப் இறந்த தகவல் கருங்கல் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், சப்-இன்ஸ்பெக்டர் சனல்குமார் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் ஜான்ஜேக்கப் உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு நேற்று காலை 10 மணி அளவில் பிரேத பரிசோதனை நடந்தது. பிரேத பரிசோதனைக்கு பின்னர், அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊரான படுவூருக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது.

அங்கு அவரது வீட்டில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஜான் ஜேக்கப் உடலுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மலர் வளையம் வைத்தும், கட்சி கொடியை போர்த்தியும் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் மாநில காங்கிரசின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், குமரி மேற்கு மாவட்ட த.மா.கா. தலைவராகவும் செயல்பட்டு வந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்ஜேக்கப் மரணமடைந்து விட்டார். காமராஜர், மூப்பனார் கொள்கையின் வழி நின்று, கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. வேட்பாளராக சட்டமன்ற தேர்தலிலே போட்டியிட்டு தொடர்ந்து 2 முறை வெற்றிபெற்ற அவர், தொகுதி மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார்.

மக்கள் தொண்டனாக பணியாற்றிவந்த அவர் இன்று நம்மிடையே இல்லை. அவருடைய இந்த இழப்பு தொகுதி மக்களுக்கும், த.மா.கா. கட்சிக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜான்ஜேக்கப்பின் உடலுக்கு எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், ராஜேஷ்குமார், முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குமாரதாஸ், அப்பாவு உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் அஞ்சலிசெலுத்தினர்.

அதைத்தொடர்ந்து மாலை 3 மணி அளவில் இறுதி சடங்குகள் நடைபெற்றது. சகாயநகர் சதாசகாய அன்னை ஆலயத்தில் நடந்த கூட்டுத்திருப்பலிக்கு பின்னர், ஜான் ஜேக்கப்பின் உடல் குடும்ப கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஜான்ஜேக்கப் உடலுக்கு, குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், பிரின்ஸ், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பால்வளத்தலைவர் எஸ்.ஏ.அசோகன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்