மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி: என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது

பெங்களூருவில் மருத்துவ கல்லூரிகளில் ‘சீட்‘ வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-02-14 21:30 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் மருத்துவ கல்லூரிகளில் ‘சீட்‘ வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ரூ.82 லட்சத்துடன் அவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

2 பேர் கைது

பெங்களூருவில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படிக்க ‘சீட்‘ வாங்கி தருவதாக கூறி ஒரு கும்பல் பல கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்து விட்டதாக மைகோ லே-அவுட் போலீஸ் நிலையத்தில் 3 புகார்கள் கொடுக்கப்பட்டன. அந்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குகள் பதிவு செய்து மோசடி கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்தார்கள். மேலும் மோசடி கும்பலை பிடிக்க தென்கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் போரலிங்கய்யா மேற்பார்வையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் மோசடி கும்பலை தேடிவந்தனர்.

இந்த நிலையில், மருத்துவ கல்லூரியில் ‘சீட்‘ வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக 2 பேரை மைகோ லே-அவுட் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் எலெக்ட்ரானிக் சிட்டியை சேர்ந்த ரஜத் ஷெட்டி(வயது 31), கொடிகேஹள்ளியை சேர்ந்த ஜெயபிரகாஷ்(31) என்று தெரிந்தது. இவர்களில் ரஜத் ஷெட்டியின் சொந்த ஊர் உடுப்பி மாவட்டம் குந்தாபுரா என்பதும், ஜெயபிரகாசின் சொந்த ஊர் ஜார்கண்ட் மாநிலம் என்பதும் தெரியவந்தது.

பல கோடி ரூபாய் மோசடி

இவர்கள் 2 பேரும் ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டுள்ளனர். இதற்காக பி.டி.எம். லே-அவுட்டில் பகுதியில் ஒரு கல்வி நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அந்த கல்வி நிறுவனத்தின் மூலம் பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவ கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு படிக்க ‘சீட்‘ பெற்று தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய தொழில் அதிபர்கள், ரியல்எஸ்டேட் அதிபர்கள் தங்களது பிள்ளைகளுக்கு ‘சீட்‘ பெற்றுக் கொடுக்கும்படி கூறி ரஜத் ஷெட்டி, ஜெயபிரகாசிடம் பல லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளனர்.

அவர்கள் கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் ’சீட்’ வாங்கி கொடுக்காமலும், வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமலும் 2 பேரும் மோசடி செய்திருக்கிறார்கள். இவ்வாறு இவர்கள் இருவரும் மருத்துவ கல்லூரிகளில் சீட் வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பணம் பெற்று திரும்ப கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டு இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

ரூ.9.45 லட்சம் பறிமுதல்

கைதானவர்களிடம் இருந்து ரூ.9.45 லட்சம், முக்கிய ஆவணங்கள், ஒரு கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான ரஜத் ஷெட்டி, ஜெயபிரகாஷ் மீது மைகோ லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த மோசடி சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து தென்கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் போரலிங்கய்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

ரூ.82 லட்சம் முடக்கம்

பெங்களூருவில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரிகளில் ‘சீட்‘ வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக ரஜத் ஷெட்டி, ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ரஜத் ஷெட்டி என்ஜினீயர் ஆவார். அவர் தனியார் நிறுவனத்தில் முதலில் பணியாற்றினார். பின்னர் 2013-ம் ஆண்டு மருத்துவ கல்லூரிகளில் சீட் வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பணம் பெற்று ரஜத் ஷெட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் மீது உடுப்பி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இவர், பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்க ரூ.20 லட்சத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்து வைத்திருந்தார்.

அதுபோல, ஜெயபிரகாஷ் தனது மாமனார், மாமியாரின் வங்கி கணக்குகளில் ரூ.50 லட்சத்தையும், தனது குடும்பத்தினரின் வங்கி கணக்கில் ரூ.12 லட்சத்தையும் டெபாசிட் செய்து வைத்திருந்தார். இதையடுத்து 2 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. அந்த வங்கி கணக்குகள் ரூ.82 லட்சத்துடன் முடக்கப்பட்டு உள்ளது. மருத்துவ கல்லூரியில் ‘சீட்‘ பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுவதற்காக பெங்களூருவில் மட்டும் போலியாக 5 நிறுவனங்களை 2 பேரும் ஆரம்பித்திருந்ததும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்