கண்ணமங்கலம் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி மறியல்

கண்ணமங்கலம் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வராததால் அவர்களாகவே கலைந்து சென்றனர்.

Update: 2018-02-14 22:45 GMT
கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் ஊராட்சியில் குடிமிகுடிசை மற்றும் 5 புத்தூர் ஊராட்சியில் குஞ்சாந்தாங்கல் ஆகிய 2 கிராமங்களிலும் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊர்களுக்கு வாழியூர் செல்லும் சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை உள்ளது.

இந்த சாலை அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது தார் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக காணப்படுகிறது. சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். எனினும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வண்ணாங்குளம் கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமிலும் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென குடிமிகுடிசை செல்லும் சாலையில் கொளுத்தும் வெயிலில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் யாரும் வரவில்லை. பின்னர் வெயில் காரணமாக பொதுமக்கள் அவர்களாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், ‘குடிமிகுடிசை, குஞ்சாந்தாங்கலில் சாலை அமைத்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும். இல்லையெனில் மீண்டும் போராட்டம் நடத்துவோம்’ என்றனர். 

மேலும் செய்திகள்