காவேரிப்பட்டணத்தில் அங்காளம்மன், பூங்காவனத்தம்மன் மயான கொள்ளை தேர்த்திருவிழா

காவேரிப்பட்டணத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அங்காளம்மன், பூங்காவனத்தம்மன் மயான கொள்ளை தேர்த்திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-02-14 22:45 GMT
காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அங்காளம்மன், பூங்காவனத்தம்மன் மயான கொள்ளை தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி பன்னீர்செல்வம் தெருவில் ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரி மற்றும் மயான கொள்ளை திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 5 மணியளவில் முகவெட்டு எடுத்து ஆற்றங்கரை செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. 5 மணி முதல் 9 மணி வரை அம்மன் சர்வ அலங்கார தரிசனம் நடந்தது.

விழாவில் பக்தர்கள் அலகு குத்தியும், உடல் முழுவதும் எலுமிச்சம் பழங்களை குத்தியபடி வந்தும் அம்மனுக்கு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் காளி வேடமணிந்து வந்தனர். காலை 9 மணியளவில் அலகு குத்திக் கொண்டு மயானம் செல்லுதல் மற்றும் திருத்தேர் மயானம் புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைமுன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காளம்மன் ஊர்வலமாக புறப்பட்டு, காவேரிப்பட்டணம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அப்போது வீதியின் இருபுறமும் திரண்டிருந்த பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் சிலர் அந்தரத்தில் அலகு குத்தி தொங்கியபடி வந்த போது குழந்தைகளையும் தூக்கி வந்து அம்மனை வழிபட்ட காட்சி அங்கு கூடியிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இதனைத் தொடர்ந்து சாமியின் தேர் தென்பெண்ணை ஆற்று பாலத்தை கடந்து ஆற்றங்கரையை சென்றடைந்தது. தென்பெண்ணை ஆற்று பாலத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்ததால் அந்த வழியாக செல்லும் அனைத்து பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் காவேரிப்பட்டணம் நகருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.

இந்த விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின் பேரில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.


மேலும் செய்திகள்