பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம் வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ. பங்கேற்பு

தூத்துக்குடியில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.;

Update: 2018-02-14 21:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

பொதுக்கூட்டம்

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும், அதனை திரும்ப பெறாத அ.தி.மு.க. அரசை கண்டித்தும் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தர்மராஜ், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், இந்திய கம்யூனிஸ்டு ஞானசேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி இக்பால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் வரவேற்று பேசினார்.

நடிகர்கள் அரசியல் எடுபடாது

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

மத்திய, மாநில அரசுகள் மக்களை பற்றி சிந்திப்பது இல்லை. பஸ் கட்டண உயர்வால் தமிழக மக்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கருணாநிதி ஆட்சியில் பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கம்ப ராமாயணத்தை இயற்றியவர் கம்பர் என்று சொல்லாமல் சேக்கிழார் என்று தவறாக கூறினார். பிரதமர் நரேந்திர மோடி பக்கோடா விற்பனை செய்ய சொல்கிறார். இன்று மக்களை இவர்கள் இந்த நிலைமைக்கு தள்ளி விட்டார்கள். நடிகர்கள் மக்களை பற்றி சிந்திப்பது இல்லை. 60 ஆண்டுகளுக்கு மேல் மக்களை பற்றி சிந்திக்காத இவர்கள், மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் எதுவும் செய்யவில்லை. ஆனால் இன்று மக்களை காக்க வருகிறோம் என்று கூறுகிறார்கள். இவர்கள் அரசியல் எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. ஆட்சி

அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசும்போது, தமிழக அரசு இரவோடு இரவாக பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அதே போல் மத்திய அரசும் இரவோடு இரவாக பண மதிப்பிழப்பு செய்து விட்டது. மத்திய, மாநில அரசுகள் மக்களை தண்டித்து விட்டது. 2006-11-ல் தி.மு.க. ஆட்சியில் ஒரு தடவை கூட பஸ் கட்டணத்தை உயர்த்தியது இல்லை. ஆனால் இன்றைய அ.தி.மு.க. அரசு 7 ஆண்டுகளில் 2 முறை பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த அரசு தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி மலரும் என்றார்.

கீதாஜீவன் எம்.எல்.ஏ. பேசும்போது, பஸ் கட்டண உயர்வால் தமிழக மக்கள் தினமும் கண்ணீர் சிந்தி வருகின்றனர். இதனை கண்டித்து தி.மு.க. சார்பில் போராட்டம், மறியல் நடத்தி உள்ளோம். இந்த அரசு கண் துடைப்புக்கு பஸ் கட்டணத்தை குறைத்துவிட்டு, மக்களை பற்றி சிந்திக்க தவறி விட்டது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற உடன் பஸ் கட்டணத்தை குறைக்க முதல் கையெழுத்து போடுவார் என்றார். இந்த கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்