அரசு பணி நியமனங்கள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - முன்னாள் அமைச்சர் செல்வகணபதி பேச்சு

அரசு பணி நியமனங்கள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி பேசினார்.

Update: 2018-02-14 22:15 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சிகளின் சார்பில் அ.தி.மு.க. அரசின் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை முன்பு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் திவாகரன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் குணா, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிநாததுரை, சமத்துவ மக்கள் கழக மாவட்ட தலைவர் அப்துல்ஹமீது உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் கார்மேகம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும் தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான சுப.தங்கவேலன், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு மாநில நிர்வாக குழு உறுப்பினர் கண்ணகி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கூட்டத்தில், தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி கலந்து கொண்டு பேசியதாவது:- ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தி.மு.க. மக்களுக்காக போராடி வருகிறது. பஸ் கட்டண உயர்விற்கு நாட்டு மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அரசு செவிமடுக்கவில்லை. இரக்கமற்ற முறையில் 100 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுஉள்ளது. இந்த உயர்வு மக்களால் தாங்க முடியாத அளவிற்கு உள்ளது.

பதவி ஒன்றையே குறிக்கோள் என அ.தி.மு.க. அரசு ஆட்சி செய்து வருகிறது. மக்கள் நலனை சிறிதும் நினைக்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்ட மக்கள் நல திட்டங்களை கூட சரியாக செயல்படுத்தாமல் மக்களை வாட்டிவதைக்கின்றனர். ஜெயலலிதா உயிரோடு இருந்தால்கூட இந்த பஸ் கட்டண உயர்வினை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

போக்குவரத்து கழகத்தில் நஷ்டத்தை காரணம்காட்டி பஸ் கட்டண உயர்வு என்பது ஏற்கமுடியாது. பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் திட்டம், சத்துணவு ஆயா பணி, பல்கலை கழக துணைவேந்தர் பணி, கல்லூரி விரிவுரையாளர் பணி என அனைத்திற்கும் விலை நிர்ணயித்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. அரசு பணி நியமனங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். துணைவேந்தர் பதவிகள் கோடிக்கணக்கில் ஏலம் விடப்படுகிறது.

நீட் தேர்வு உள்ளிட்ட எதையும் தமிழக அரசு எதிர்க்கவில்லை. பஸ் கட்டணத்தினை குறைப்பதற்காக தி.மு.க. அளித்துள்ள பரிந்துரைகளை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தினாலே நஷ்டத்தினை குறைக்க முடியும். தமிழகத்தின் ஜீவாதார உரிமையை மத்திய அரசு காலில் போட்டு மிதிக்கிறது. அதனை 50 அ.தி.மு.க. எம்.பிக்களும் வேடிக்கை பார்த்து வருகின்றனர். டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் சிறு வணிகர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறார்கள். பணக்காரர்கள் வங்கிகளில் பணத்தை பெற்று திரும்ப செலுத்தாததால் ஏழைகள் நசுக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் அகமதுதம்பி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, முன்னாள் கவுன்சிலர் அய்யனார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஜெகநாதன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்