மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் விடிய, விடிய சிறப்பு பூஜை

மகா சிவராத்திரியையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் விடிய, விடிய சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-02-14 22:30 GMT
கரூர்,

சிவபெருமானை வழிபடுவதில் முக்தியை தரும் விரதமான மகா சிவராத்திரி விரதம் நேற்று முன்தினம் கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய சிறப்பு பூஜை நடந்தது. மேலும் சாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்களை ஒழுங்குபடுத்த கோவில் வளாகத்தில் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் வளாகத்தில் ஆங்காங்கே அமர்ந்திருந்து பக்தர் கள் சிவ பக்தி பாடல்களை பாடினர். மேலும் கோவிலில் மாணவ-மாணவிகளின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

பிரதோஷம்

மகா சிவராத்திரி தினத்தில் நேற்று முன்தினம் பிரதோஷமும் அமைந்திருந்ததால் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மகா சிவராத்திரியையொட்டி அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவில், நெரூர், அரவக்குறிச்சி, தோகைமலை, கிருஷ்ணராயபுரம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து விரதம் இருந்து வழிபாடு நடத்தினர்.

1008 தீபம்

மகாசிவராத்திரியையொட்டி குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலில் சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் மூலம் 1008 தீபம் ஏற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை நடைபெற்ற இந்த பூஜையில் சிவனடியார்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர். கோவிலின் ஒரு பகுதியில் சிவனடியார்கள் சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் குளித்தலை அருகேயுள்ள சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவிலில் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடை பெற்றன. 

மேலும் செய்திகள்