கோவில்களில் மகா சிவராத்திரி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

புதுக்கோட்டை மாவட்ட கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-02-14 22:30 GMT
கீரமங்கலம்,

கீரமங்கலத்தில் பழமையான மெய்நின்றநாதர் கோவில் உள்ளது. கோவிலில் சிவனின் பிரமாண்டமான சிலையும், அதன் எதிரே தலைமை புலவர் நக்கீரன் சிலையும் உள்ளது. இக்கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே வரத் தொடங்கினார்கள். மேலும் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் இரவில் கோவிலிலேயே தங்கி இருந்தனர். தொடர்ந்து இரவில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பின்னர் அன்னதானம், கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள், கிராமிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

பொன்னமராவதி ஆவுடைநாயகி அம்மன் சமேத சோழீஸ்வரர் கோவிலில், சிவராத் திரியையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை முதல் இரவு வரை பக்தர்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இதேபோல மூலங்குடி, பொன்.புதுப்பட்டி, திருக்களம்பூர், அம்மன்குறிச்சி, கொப்பனாபட்டி உள்பட பல்வேறு கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடந்தது.

திருமயத்தில் உள்ள பழமைவாய்ந்த சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. இதையொட்டி சிவனுக்கு பால், தேன், தயிர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிவனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதேபோல துருவாசபுரம் சிவன்கோவில், விராச்சிலை, பனையப்பட்டி, குழிபிறை, திருமயம் மேலூர், திருமயம் காசிவிஸ்வநாதர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடந்தது.

நமணசமுத்திரம் அருகே வடக்கு தாழம்பட்டி கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோவில்பட்டியிலிருந்து பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, பக்தர்கள் வழிபட்டனர். மேலும் பக்தர்கள் கரகம் எடுத்து ஊர்வலமாக வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல புதுக்கோட்டை அருகே உள்ள திருக்கோகர்ணம் காமாட்சி அம்மன் கோவிலில் மகா சிவராத்தியையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அறந்தாங்கி அருகே உள்ள தினையாக்குடியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா சிவராத்தியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல அறந்தாங்கி ராஜேந்திரசோழீஸ்வரர் கோவில், அகரம் காசிவிஸ்வநாதர்கோவில், எரிச்சி காசிவிஸ்வநாதர் கோவில், விஸ்வநாதபுரம் காசிவிஸ்வநாதர் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. 

மேலும் செய்திகள்