திருப்பூர் மாவட்டம் முழுவதும் பணமில்லா பரிவர்த்தனையை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும், கலெக்டர் அறிவுரை

திருப்பூர் மாவட்டம் முழுவதும் பணமில்லா பரிவர்த்தனையை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி அறிவுறுத்தினார்.

Update: 2018-02-14 22:30 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை பற்றிய ஒருநாள் பயிற்சி முகாம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்த முகாமை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்து பேசியதாவது:-

அனைவரும் மின்னணு பணமில்லா பரிவர்த்தனை செய்து, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். கிராம அளவில் பொதுமக்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நிதியியல் கல்வி, அனைவருக்கும் நிதி சேவை, பணமில்லா பரிவர்த்தனை செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களிடம் தெரிவிக்க வேண்டும். ஏ.டி.எம். கார்டு, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ள செயலி குறித்தும், மின்னணு பரிவர்த்தனைகளையும் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் பணமில்லா பரிவர்த்தனையை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

மேலும் செய்திகள்