நெல்லை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து தப்பி ஓடிய 5 பேர் பிடிபட்டனர்

நெல்லை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து தப்பி ஓடிய 5 பேரை போலீசார் பிடித்தனர்.

Update: 2018-02-14 21:00 GMT
நெல்லை,

நெல்லை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து தப்பி ஓடிய 5 பேரை போலீசார் பிடித்தனர். இவர்களில் ஒருவர் கத்தியால் வயிற்றை கீறிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

12 பேர் தப்பி ஓட்டம்


நெல்லை புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில், பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இங்கு நேற்று முன்தினம் வார்டன் சண்முகராஜ், ஆயுதப்படை போலீஸ்காரர் அருணாசலம் ஆகியோர் பணியில் இருந்தனர்.

நள்ளிரவில் சீர்திருத்த பள்ளியில் இருந்த 12 பேர் திடீரென சண்முகராஜ், அருணாசலம் ஆகியோரை இரும்பு கம்பிகளால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

4 பேர் பிடிபட்டனர்

மேலும் தப்பி ஓடியவர்களை பிடிக்க நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் பாளையங்கோட்டை பகுதியில் நின்ற 3 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இவர்கள் மேலப்பாளையம் குறிச்சி, தட்டப்பாறை, திருப்பத்தூர் ஆகிய ஊர்களை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் தப்பி ஓடியவர்களில் ஒருவரான கோவில்பட்டியை சேர்ந்த 17 வயது வாலிபரை கோவில்பட்டியில் போலீசார் பிடித்து கைது செய்தனர்.

தற்கொலைக்கு முயற்சி

இவர் கோவில்பட்டி நகைக்கடை அதிபர் ராமலிங்கம் என்ற செந்தில் (வயது 40) கடந்த மாதம் 30-ந்தேதி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார். நேற்று முன்தினம் இரவு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பிய அவர் நேற்று காலையில் கோவில்பட்டி பழனி ஆண்டவர் கோவில் தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து சென்ற கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் போலீசார் அவரை பிடிக்க முயன்றனர்.

அப்போது அந்த வாலிபர் தனது பையில் வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து, தன்னை பிடிக்க முயன்றால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வாலிபரிடம் நைசாக பேச்சு கொடுத்தவாறு திடீரென்று அவரிடம் இருந்த கத்தியை பறித்தனர். அப்போது அந்த வாலிபர் தனது வயிற்றில் கத்தியால் லேசாக கீறிக்கொண்டார். இதில் காயம் அடைந்த அந்த வாலிபருக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேலப்பாளையம் போலீசாரை வரவழைத்து, அந்த வாலிபரை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஒருவர் கைது

நெல்லை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து விருதுநகர் மாவட்டம் சேத்தூரை சேர்ந்த சிவகணேசன் (18) என்பவரும் தப்பி ஓடினார். அவரை பிடிக்க விருதுநகர் மாவட்ட போலீசார் உஷார் படுத்தப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சேத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த சிவகணேசனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை மேலப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர் மீது ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர தப்பி ஓடியவர்களில் மற்ற 7 பேரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்