காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் தாலியுடன் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் தாலியுடன் இந்து முன்னணியினர் திருச்சி மலைக்கோட்டை கோவில் வாசல் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-02-14 23:00 GMT
மலைக்கோட்டை,

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினத்திற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். நேற்று காலை திருச்சி மாநகர் மாவட்ட இந்து முன்னணியினர் கையில் தாலி ஏந்தி கொண்டு, காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காதலர் தினத்தை தடை செய்ய வலியுறுத்தியும் திருச்சி மலைக்கோட்டை கோவில் வாசல் முன்பு மாநகர் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் சுரேஷ்பாபு முன்னிலையில் ஒன்று கூடினர்.

வழக்கமாக காதலர் தினத்தின் போது மலைக்கோட்டைக்கு காதல் ஜோடிகள் வருவார்கள். அதனால் காதலர்கள் யாராவது வந்தால் அவர்களிடம் தாலியை கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தில் இந்து முன்னணியினர் அங்கு கூடியிருந்தனர். ஆனால் காதல் ஜோடி எதுவும் அங்கு வரவில்லை.

தொடர்ந்து தினசரி காலண்டர்களில் உலக காதலர் தினம் என்று அச்சிடப்படுவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். காதலர் தினம் கொண்டாடுகிறோம் என்று சொல்லிக் கொண்டு நமது கலாசாரத்தையும், குடும்ப அமைப்பு முறையை கெடுக்கும் விதமாக நடந்து கொள்வதை தடுக்க வேண்டும்.

பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள், கோவில்களில் காதலர்கள் என்ற பெயரில் சுற்றித்திரிபவர்களை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி சிறிது நேரம் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்