சாம்பல் புதனையொட்டி கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது

சாம்பல் புதனையொட்டி கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று முதல் தொடங்கியது.

Update: 2018-02-14 21:00 GMT
தூத்துக்குடி,

சாம்பல் புதனையொட்டி கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று முதல் தொடங்கியது.

தவக்காலம்

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த புனித வெள்ளிக்கிழமைக்கு முந்தின 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். தவக்காலத்தின் தொடக்க நாளான நேற்று சாம்பல் புதன்கிழமையாக அனுசரிக்கப்பட்டது.

சிறப்பு பிரார்த்தனை

இதையொட்டி தூத்துக்குடி சின்னக்கோவிலில் நேற்று காலை பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சாம்பல் புதனையொட்டி கடந்த ஆண்டு குருத்தோலை பண்டிகைக்கு பிறகு மக்கள் வாங்கி சென்ற குருத்தோலைகள் ஆலயத்தில் ஒப்படைக்கப்பட்டு, அந்த ஓலைகள் எரிக்கப்பட்டன. அதன் சாம்பலை கொண்டு பங்குமக்கள் நெற்றியில் பிஷப் இவோன்அம்புரோஸ் சிலுவை அடையாளமிட்டு ஆசி கூறினார். நிகழ்ச்சியில் பங்குதந்தை ராயப்பன் மற்றும் உதவி பங்குதந்தைகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி பங்குதந்தை பிராங்கிளின் பர்னாண்டோ தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

பனிமயமாதா ஆலயம்

இதேபோன்று பனிமயமாதா ஆலயம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலிகள் நடத்தப்பட்டன.

ஆறுமுகநேரி புனித சவேரியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு தினத்தன்று பயன்படுத்திய குருத்தோலைகளை எரித்து, அதன் சாம்பலை கிறிஸ்தவர்களின் நெற்றியில் பங்குதந்தை ஸ்டார்வின், உதவி பங்குதந்தை சுகந்தன் ஆகியோர் சிலுவை அடையாளமிட்டு பூசினர்.

மேலும் செய்திகள்