நகை பறிப்பு சம்பவங்கள்; அதிரடி நடவடிக்கை தேவை

பெண்களிடம் இருந்து அவர்கள் அணிந்துள்ள தங்க சங்கிலியை பறித்து அதன் மூலம் முரட்டு வழியில் பணம் சம்பாதிக்கும் கும்பல் அவ்வப்போது தலைக்காட்டத்தான் செய்கிறது.

Update: 2018-02-14 08:16 GMT
சமீபத்தில் சென்னை புறநகர் பகுதியில் இந்த சம்பவங்கள் சற்றே அதிகரித்து வருவதாக தெரிகிறது. அதுவும் கொடூரமான முறையில் பெண்களை தாக்கி நகை பறிக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன. டிப்-டாப் உடையில் வலம் வரும் மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் துணிச்சலுடன் நகைகளை பறித்துக்கொண்டு செல்கின்றனர்.

இவற்றினை தடுத்து நிறுத்த என்னுடைய 36 ஆண்டு காவல் பணி அனுபவத்தின் அடிப்படையில் சில கருத்துக்களை கூற விரும்புகின்றேன். ஏனென்றால் பறிபோகும் நகைகள் தாலிச் சங்கிலியாக இருந்தால் திருமணமான அந்த பெண்களை மிகவும் பாதிக்கின்றது. நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பார்க்கலாம்.

காவல்துறையினர் அவர்களுடைய ரோந்து பணியினை சம்பந்தப்பட்ட இடங்களில் எல்லோருக்கும் தெரியும்படி மேற்கொள்ள வேண்டும். இந்த கொடூர நகை பறிப்பின் பின்புலமாக ஒரு பெரிய கும்பல் இருக்கத்தான் வேண்டும் என்று என்னால் சொல்ல முடியும். அந்தக் கும்பலிடம் தான் குற்றவாளிகள் இந்த நகைகளை விற்று அல்லது அடகு வைத்து பணத்தை பெறுகிறார்கள். ஆகவே அவர்களை தீவிர புலனாய்வு செய்து கண்டுபிடித்து விட்டால், இந்த குற்றங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது.

இந்தக் குற்றங்களை புரிபவர்களில் சிலர் ஏழையாக இருக்கலாம். சிலரோ குறுக்கு வழியில் பணம் சேர்த்து பகட்டு வாழ்க்கை வாழ ஆசைப்படுபவர்களாகவும் இருக்கலாம். அதற்கான காரணங்களை கண்டுபிடித்து, அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கான ஆலோசனைக் குழுவினை அமைக்கலாம். அந்தக் குழுவில் பெற்றோரும், ஆசிரியர்களும் பங்கேற்கலாம்.

எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை என்னவெனில், எந்தவொரு சமுதாயத்திலும் 90 விழுக்காடு மக்கள் சட்டத்தை மதிப்பவர்கள். 10 விழுக்காட்டினர் தான் சட்டத்தை மீறி குற்றம் புரிகிறார்கள். அந்த வகையில் சட்டத்திற்கு உட்பட்டு சட்டத்தை மதிக்கும் மக்களை திரட்டி அந்தந்த பகுதிகளில் காவல்துறையின் வழிகாட்டுதலின்படி நகை பறிப்பு பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதோடு மட்டுமின்றி அந்தப் பகுதி மக்களின் உதவியுடன் அந்தக் குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இது பற்றி நான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் 90 விழுக்காடு இந்தக் குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்கள் வேலையில்லாத ஏழை மக்கள். அவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு திட்டமிட்டு செயல்பட்டால் இந்த நகை பறிப்பு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வாய்ப்பு இருக்கிறது.

நான் என்னுடைய காவல் பணியின் ஒரு கட்டமாக சிறைத்துறையின் ஐ.ஜி.யாக பணிபுரிந்தேன். அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா சிறைகளையும் ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது. அப்போது பல உண்மைகளை நான் கண்டறிந்தேன். அதன்படி குற்றவியல் அமைப்பின் கடைசி கட்டமாக குற்றவாளிகள் சிறையில் அடைபடுவது என்ற வகையில் அவர்களின் பின்புலம் பற்றி தீவிர ஆராய்ச்சி செய்து பல அதிர்ச்சி தகவலை பெற்றேன்.

சட்டத்தின்படி சரியாக இருப்பதாக தோன்றினாலும் சாட்சிகள் வலுவாக இல்லாத நிலையில் ஒரு இளைஞனும் அவனது தந்தையும் ஆயுள் தண்டனை அனுபவித்து கொண்டிருந்தார்கள். அந்த நிலையில் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் மேல் முறையீடு கால அவகாசம் முடிந்திருந்தது. ஆனாலும் அந்த படித்த அந்த இளைஞனின் மேல் படிப்புக்கும் முனைவர் பட்டம் பெறுவதற்கும் உதவி அந்த இளைஞர் இன்று ஒரு பல்கழைக்கழகத்தின் பேராசியராக பணிபுரிகிறார். இதுபோன்று எத்தனையோ சம்பவங்களை உதாரணமாக சொல்லலாம்.

அதன் விளைவாகத் தான் ஓய்வு பெற்றப்பின் சிறைவாசிகள் மறுவாழ்வுத்திட்டத்தை தொடங்கினேன். என்னுடைய அறக்கட்டளை மூலம் அவர்களுக்கு தொழிற்பயிற்சி கொடுக்கிறேன். அதன் மூலம் 60 முன்னாள் சிறைவாசிகள் நல்வாழ்வு பெற்று தமிழ்நாட்டின் சட்டத்தை மதிக்கும் நல்ல குடிமகன்களாக திகழ்கிறார்கள். குற்றவாளிகளுக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதை சொல்கிறேன்.

வெ.வைகுந்த் ஐ.பி.எஸ்., முன்னாள் டி.ஜி.பி., சென்னை

மேலும் செய்திகள்