மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

சேலத்தில் மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2018-02-13 23:00 GMT
சேலம்,

சேலம் பெரமனூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி கும்பிட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் 2 உண்டியல்கள் உள்ளன. கோவிலில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று அதிகாலை கோவிலுக்கு பக்தர்கள் சிலர் சாமி கும்பிட சென்றனர். அப்போது அவர்கள் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு சில்லறை காசுகள் சிதறி கிடந்தன. இதனால் மர்ம ஆசாமிகள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.


இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு அதே பகுதியை சேர்ந்த ஓட்டல் கடைக்காரர் ஒருவர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மர்ம ஆசாமிகள் சிலர் கோவிலில் இருந்து வேகமாக வெளியே ஓடி சென்றதை அவர் பார்த்ததாக கூறப்படுகிறது. அவர்கள் கொள்ளையர்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் இந்த கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அப்போது அதில் ரூ.60 ஆயிரம் வரை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த முறையும் அதே அளவு பணம் இருக்கலாம் என்று பக்தர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து மர்ம ஆசாமிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர்.


கோவில் அருகே உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் திருடர்களின் முகம் பதிவாகி உள்ளன. அந்த பதிவை போலீசார் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்