தேங்காய் வியாபாரியை ஏமாற்றி ரூ.5 லட்சம் திருட்டு

அறந்தாங்கி அருகே தேங்காய் வியாபாரியை ஏமாற்றி, ரூ.5 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-02-13 23:00 GMT
அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள நாட்டுமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 42). இவர் தென்னந்தோப்புகளில் இருந்து மொத்தமாக தேங்காய்களை வாங்கி, மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அறந்தாங்கியில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ. 5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு,ஆண்டாக்கோட்டை வழியாக தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அவர் அறந்தாங்கி-பேராவூரணி சாலையில் மருதங்குடி அருகே சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 4 பேர், தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை சாலையில் சிதறி விட்டனர். பின்னர் ரவியை சப்தம் போட்டு அழைத்து, உங்கள் பையில் இருந்த பணம் சாலையில் விழுந்ததாக கூறியுள்ளனர். இதனை நம்பிய ரவி, தனது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி, சாலையில் கிடந்த பணத்தை எடுத்துள்ளார். அப்போது அந்த மர்மநபர்கள், ரவி வைத்திருந்த பண பையை எடுத்துக் கொண்டு தங்களின் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

இதையடுத்து உடனே ரவி தனது மோட்டார் சைக்கிளை பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மற்றும் ஏ.டி.எம். கார்டு ஆகியவை வைக்கப்பட்டிருந்த பையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ரவி புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்