ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கடைகளின் வாடகை உயர்வுக்கு தடைவிதிக்க வேண்டும், மு.க.அழகிரி ஐகோர்ட்டில் வழக்கு

மதுரை பெரியார் பஸ்நிலைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கடைகளுக்கு வாடகை உயர்த்தப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மு.க.அழகிரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

Update: 2018-02-13 23:15 GMT
மதுரை,

முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை பெரியார் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்சில் மாநகராட்சிக்கு சொந்தமான 3 கடைகளை குத்தகைக்கு எடுத்து மருத்துவ ஆய்வகம் நடத்தி வருகிறேன். தற்போது மாத வாடகையாக 2 கடைகளுக்கு ரூ.9 ஆயிரத்து 969-யும், ஒரு கடைக்கு ரூ.10 ஆயிரத்து 565-யும் செலுத்துகிறேன்.

இந்தநிலையில் 3 கடைகளின் வாடகையை ரூ.13 ஆயிரத்து 358 ஆக உயர்த்தி உள்ளதாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த வாடகையை செலுத்த தவறினால் கடைகளை பொது ஏலத்தில் விடப்படும் என்றும், 2007-ல் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை பிறப்பித்த அரசாணை அடிப்படையில் மேற்கண்ட கடைகளின் வாடகை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறையின் மதிப்பீடு, தற்போதைய மதிப்பு, கட்டிட மதிப்பு மற்றும் நிலத்தின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே வாடகை உயர்த்தப்பட வேண்டும். ஆனால் தற்போது வாடகை உயர்த்தப்பட்டுள்ள இந்த கடைகளுக்கு மேற்கண்ட மதிப்பீடுகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. மாநகராட்சியின் இந்த முடிவு சட்டவிரோதமானது. எனவே மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிப்பதுடன், இந்த நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதேபோல ஷாப்பிங் காம்ப்ளக்சில் கடை நடத்தி வரும் சிலரும், மதுரை ஜான்சிராணி பூங்கா அருகில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் கடை நடத்தி வரும் சிலர் உள்பட 13 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் ஜானகிராமுலு ஆஜராகி, “மனுதாரர்களின் கடைகளுக்கு வாடகை உயர்த்துவது தொடர்பாக மனுதாரர்களின் கருத்துகளை கேட்டு முடிவு செய்து இருக்கலாம்” என்றார். இதற்கு மாநகராட்சி தரப்பில் ஆஜரான வக்கீல் முகமது மொய்தீன், “கடைகளுக்கு தற்போதைய மதிப்பீட்டின் அடிப்படையில் தான் வாடகை உயர்த்தப்பட்டு உள்ளது” என்றார்.

இதனையடுத்து இந்த வழக்கு குறித்து மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். 

மேலும் செய்திகள்