துணைவேந்தர் பதவிக்காக முன்னாள் அமைச்சருக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதா? கணபதியிடம் போலீசார் தீவிர விசாரணை

துணைவேந்தர் பதவியை பெற முன்னாள் அமைச்சருக்கு ரூ.2 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து கணபதியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-02-13 23:00 GMT
கோவை,

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி. உதவி பேராசிரியர் சுரேசை பணிநிரந்தரம் செய்ய ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார், கணபதியையும், இடைத்தரகராக செயல்பட்ட பேராசிரியர் தர்மராஜையும் கைது செய்தனர். இதையடுத்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கணபதியை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். அதில், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், கணபதியை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ராஜேஷ், தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் கனகசபாபதி, ஆறுமுகம் மற்றும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஆனால் நேற்று 2-வது நாளாக நடந்த விசாரணையின்போது, போலீசார் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் கணபதி மவுனமாக இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் கணபதி கைதானபோது ரசாயனம் தடவிய ரூ.1 லட்சம் ரொக்கத்தை மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர். ரூ.29 லட்சத்துக்கான 4 காசோலைகள் மாயமாகிவிட்டன. அது எங்கே? என்று போலீசார் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.

கணபதி கடந்த 2016-ம் ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக பணியமர்த்தப்பட்டார். அதன் பின்னர் பல்கலைக்கழகத்தில் நடந்த பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் விதிமுறைகளை மீறி ரூ.60 கோடிக்கும் மேல் சேர்த்ததாகவும், அந்த பணத்தில் சிலருக்கு பங்கு கொடுத்தாகவும் கணபதி மீது புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக போலீசார் அவரிடம் கேட்டபோது, சரியான பதிலை கூறவில்லை. தொடர்ந்து போலீசார் துருவி, துருவி அவரிடம் கேள்விகளை எழுப்பியபோது, பேராசிரியர் தர்மராஜ், தொலைதூர கல்வி மைய இயக்குனர் மதிவாணன் ஆகியோரின் தொடர்பு பற்றிய விவரங்கள் மற்றும் பங்கு கொடுத்த சிலருடைய பெயர்களை கூறியதாக தெரிகிறது.

பல்கலைக்கழகத்தில் பணியிடங்களை நிரப்புவதற்காக சில பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் இடைத்தரகர்களாக செயல்பட்டதும், அவர்களுடைய பெயரையும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அந்த நபர்களின் பெயர் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கேட்டபோது, அவர்கள் அதை தெரிவிக்க மறுத்துவிட்டனர். அதுபோன்று வெளிமாநிலங்களில் தொலைதூர கல்வி மையங்கள் அமைக்கப்பட்டதில் நடந்த விதிமுறை மீறல்கள் குறித்தும் போலீசார் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர். அந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை.

மேலும் கணபதி துணைவேந்தராக இருந்தபோது வசூலித்த ரூ.60 கோடிக்கும் மேற்பட்ட பணத்தை என்ன செய்தார்? எங்காவது சொத்துக்கள் வாங்கி உள்ளாரா? அந்த பணம் யாருடைய வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது?, வேறு எங்காவது முதலீடு செய்யப்பட்டு உள்ளதா? என்பது குறித்த விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளில் (பி.எச்.டி.) சேர்ந்த மாணவர்களிடமும் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளதால், அந்த மாணவர்களிடம் எவ்வளவு பணம் பெறப்பட்டது? என்பது குறித்த பட்டியலையும் போலீசார் தயாரித்து வருகிறார்கள்.

கணபதி, முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்துதான் இந்த பதவியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. எனவே அது உண்மையா? அந்த முன்னாள் அமைச்சர் யார்? அவருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளதா? என்றும் விசாரணை நடத்தினார்கள். அதற்கு அவர் எவ்வித பதிலையும் கூறாமல் மவுனமாகவே இருந்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:-

துணை வேந்தர் பதவியை பயன்படுத்தி கணபதி பலரிடம் லஞ்சம் வாங்கியதும் அதற்குஇடைத்தரகர்களாக பலர் செயல்பட்டு இருப்பதும் விசாரணையில் தெளிவாகி இருக்கிறது. லஞ்சமாக பெற்ற பணத்தை யாருக்கெல்லாம் கொடுத்தார்? எங்கெங்கு சொத்துக்கள் வாங்கினார்? என்பது பற்றி விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

கணபதியிடம் நடந்த விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் சிலருடைய பெயரை வெளியிட்டு உள்ளார். எனவே அவர் கூறியது உண்மையா? என்பது குறித்து கண்டறிய, அந்த நபர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளோம். இதற்காக அவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்